மூதாட்டியிடம் நகை பறித்த விவகாரம்: காதலனின் கடனுக்காக கொள்ளைக்காரியாக மாறிய கல்லூரி மாணவி; வாக்குமூலத்தில் பரபரப்பு தகவல்
கோவை: கோவை போத்தனூர் அருகே வெள்ளலூரை சேர்ந்தவர் சரஸ்வதி (70). இவர், கடந்த 30ம் தேதி வீட்டின் முன் உறவினர்களுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு வாலிபர் மாஸ்க்குடன், திடீரென சரஸ்வதி அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்து கொண்டு, அங்கு தயாராக இருந்த இளம்பெண்ணுடன் ஸ்கூட்டரில் தப்பினார். இதுகுறித்த புகாரின்பேரில் போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 தனிப்படை போலீசார், மர்ம நபர்களை தேடினர்.
சிசிடிவி கேமராவில் சிக்கிய ஸ்கூட்டர் எண்ணை வைத்து விசாரித்தபோது, திருப்பூரை சேர்ந்த பரணிதரன் (21) மற்றும் அவரது காதலியான நெல்லையை சேர்ந்த சிந்து (21) என்பதும், இருவரும் கோவை கே.ஜி.சாவடியில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு எம்.பி.ஏ ஒன்றாக படித்து வந்ததும் தெரியவந்தது. அவர்களை கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர். விசாரணையில், பரணிதரன், தனது நண்பர்களிடம் வாங்கிய கடனை அடைக்கவும், சொகுசு கார் வாங்கி ஆடம்பரமாக வாழவும் ஆசைப்பட்டுள்ளனர். இதனால் பெண்களிடம் நகை பறிக்க திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி சரஸ்வதியிடம் நகை பறித்தபோது சிக்கினர் என்பது தெரியவந்தது. இதேபோன்று வேறு சம்பவங்களில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரிக்கின்றனர். காதலனின் கடனை அடைக்கவும், சொகுசு கார் வாங்கவும் கல்லூரி மாணவி கொள்ளைக்காரியாக மாறிய சம்பவம் இந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




