Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முக்கியத்துவம் அவசியம்

‘நீ ரின்றி அமையாது உலகு’ என்பது திருக்குறளில் இடம்பெற்றுள்ள ஒரு அற்புதமான வாசகம். இந்த உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் நீரே பிரதானம் என்பது இந்த வரி உணர்த்தும் பொருள். இந்த வகையில் கோடிக்கணக்கான மக்களின் பசி தீர்க்கும் விவசாயத்திற்கும் பெரும் ஆதாரமாக இருப்பது நீர் தான். சமீபகாலமாக நீர் குறித்த ஆய்வுகள், பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது என்பது, உலகளாவிய பிரச்னையாகவே கருதப்படுகிறது.

இதில் இந்தியாவை பொறுத்தவரை, நாட்டின் முதுகெலும்பான விவசாயத்திற்கு அதிகளவில் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம், பல்வேறு மாநிலங்களில் வேகமாக சரிந்து வருகிறது என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளது. இது ஒருபுறமிருக்க, விவசாயிகள் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க, ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவியது. அதாவது ‘வேளாண் பயன்பாட்டிற்கான நிலத்தடி நீர் வீணாகிறது. தவறாகவும் பயன்படுத்தப்படுகிறது.

இதை தவிர்க்க, ஒன்றிய அரசானது நிலத்தடி நீர் பயன்பாட்டிற்கு வரி விதிக்க திட்டமிட்டுள்ளது’ என்ற தகவலும் பரவலானது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக விவசாய சங்கங்கள், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஏற்கனவே புதிய வேளாண் சட்ட திருத்தங்களால் விவசாயிகள் உறைந்து நின்றதும், இதை திரும்ப பெறக் கோரி தலைநகரில் நடந்த போராட்டங்களும் பரபரப்பின் உச்சமானது. அதுபோன்ற சூழலை மீண்டும் எதிர்கொள்ள வேண்டும் என்பதால், இந்த அறிவிப்பில் இருந்து தற்போது ஒன்றிய அரசு பின்வாங்கியுள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘ஒன்றிய அரசு முன்னோடியாக கொண்டு வரும் புதிய திட்டத்தின் கீழ், விவசாயிகள் நிலத்தடி நீரை பயன்படுத்துவதற்கு கட்டணம் ஏதும் விதிக்கப்படவில்ைல’ என்று தெளிவுபடுத்தியுள்ளது. நமது நாட்டின் மக்கள் தொகையில் 95சதவீதம் பேர், நன்னீர் ஆதாரங்களை பயன்படுத்துகின்றனர். 44 சதவீதத்திற்கும் அதிகமானோர் நிலத்தடி நீரை, முதன்மை நீராதாரமாக நம்பி இருக்கின்றனர். இதில் நிலத்தடி நீர் என்பது, விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை.

வேகமான நகரமயமாக்கல், அதனால் உருவாகும் கட்டுமானங்கள், கட்டமைப்புகள் போன்றவற்றுக்கும், நிலத்தடி நீர் கணிசமான அளவில் உறிஞ்சப்படுகிறது. இது மட்டுமன்றி போதிய சுகாதார செயல்பாட்டு திட்டங்கள் இல்லாமலும், நிலத்தடி நீர் மாசுபடுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதில் விவசாயிகள் பயன்படுத்தும் நிலத்தடி நீர் என்பது, மனித குலத்தை வாழ வைப்பதற்கே பெருமளவில் பயன்படுகிறது என்பதையும், இங்கே கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். எனவே, இந்தியா போன்ற நாடுகளில், நீரை பயன்படுத்துவதற்கு விவசாயிகளுக்கு கட்டணம் விதித்து சிரமத்தில் ஆழ்த்துவது ஏற்புடையதல்ல.

இதற்கு மாறாக அதிகரித்து வரும் மக்கள் தொகை, விரிவாக்கம் செய்ய வேண்டிய வேளாண் பரப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை துரித கதியில் மேற்கொள்ள வேண்டும். நிலத்தடி நீர் உயர்வு சார்ந்த திட்டப்பணிகளுக்கு, அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதோடு ஒன்றிய அரசு விதிக்க வேண்டியது கட்டணம் அல்ல. நிலத்தடி நீர் பெருக்கம் சார்ந்த பெரும் விழிப்புணர்வு தான் என்கின்றனர் நீர்வள மேம்பாட்டு அமைப்புகளின் முன்னோடிகள்.