புதுடெல்லி: மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் தரவுகளின்படி, ஆகஸ்ட் மாத இறுதியில் நாட்டின் சராசரி சில்லறை சர்க்கரை விலை ஒரு கிலோ ரூ.64.24 ஆக பதிவாகியுள்ளது. இது கடந்த மாத விலையை விட சுமார் 30% மற்றும் கடந்த ஆண்டை விட 38% அதிகம். டெல்லி, மும்பை, சென்னை போன்ற முக்கிய நகரங்களில் சர்க்கரை விலை கிலோ ரூ.62 முதல் ரூ.66 வரை விற்பனையாகி வருகிறது. ராஞ்சியில் ஒரு கிலோ ரூ.68க்கு விற்பனையாகிறது.
மொத்த விற்பனை விலையும் ஒரு கிலோவுக்கு ரூ.59.73 என்ற அளவில் நிலையாக இருந்தது. இது கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் 31 சதவீதமும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 38.63 சதவீதமும் அதிகரித்துள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு இதன் விலை ஒரு கிலோவுக்கு ரூ.58.66 ஆக இருந்தது.
10 லட்சம் டன் கச்சா சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்ய அரசு அனுமதித்ததைத் தொடர்ந்து, ஆலை விலைகள் கிட்டத்தட்ட 20 % குறைந்தபோதிலும், சில்லறை மற்றும் மொத்த விலைகள் உயர்ந்துள்ளன. நாட்டில் போதுமான சர்க்கரை கையிருப்பு உள்ளதாகவும், ஆலைகள் விலைகளை உயர்த்துவதாக ஒன்றிய அரசு குற்றம் சாட்டியுள்ளது.



