முக்கிய தாக்கத்தை ஏற்படுத்திய பிரதமராக மன்மோகன் சிங்கை வரலாறு நினைவுகூறும்; சோனியா புகழாரம்: மோடி மீது கடும் தாக்கு
புதுடெல்லி: ஆங்கில பத்திரிகை ஒன்றில்ங காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தி நேற்று எழுதிய கட்டுரையில் கூறியிருப்பதாவது: ஜூலை 29,2026 என்பது நமது சமீபத்திய அரசியல் வரலாற்றில் முக்கியமான, ஆனால் போதிய அங்கீகாரம் பெறாத நாள். ஏனெனில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் புகாரில் மன்மோகன் சிங்கின் விடுதலையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சிபிஐ விசாரணை முடிவுகளை நிராகரித்ததற்காகவும் எந்தவொரு காரணமும் இன்றி முன்னாள் பிரதமருக்கு எதிராக கடுமையான கருத்துக்களை தெரிவித்ததற்காகவும் விசாரணை நீதிமன்றத்தை உச்ச நீதிமன்றம் கண்டித்தது. மிகச்சிறந்த நாணயமும் நேர்மையும் கொண்ட மனிதரான மன்மோகன் சிங் மீது நடத்தப்பட்ட பழிவாங்கும் வேட்டை, மிகவும் துயரமான அத்தியாயங்களில் ஒன்றை இந்த தீர்ப்பு முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.
அவருக்கு எதிரான பிரசாரம் ஒருங்கிணைக்கப்பட்டதாகவும் நன்கு திட்டமிடப்பட்டதாகவும் இருந்தது. இதில் அதிகார வர்க்கம் முதல் ஊடகம், நீதித்துறை, சிவில் சமூகம் மற்றும் நிச்சயமாக ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜ வரை பல தரப்பினர் ஈடுபட்டிருந்தனர். இன்று, அவர்களின் போலியான பிரசாரம் தவிர்க்க முடியாத வகையில் ஒன்றுமில்லாமல் முடிவுக்கு வந்துள்ளது. மன்மோகன் சிங் மீதான தாக்குதலில் மிகத் தீவிரமாக ஈடுபட்டவர்களில் மோடியும் ஒருவர்.
கடந்த 12 ஆண்டுகளை விட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் 10 ஆண்டுகளில் அதிக பொருளாதார வளர்ச்சி காணப்பட்டது. அதன் விளைவாக லட்சக்கணக்கான மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டனர். எனவே, அமைதியான, மென்மையான அதேசமயம் மிக முக்கியப் பங்காற்றிய பிரதமராக மன்மோகன் சிங்கை வரலாறு அன்புடன் நினைவுகூரும்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.



