இமாம் உல் ஹக்கிற்கு 2 ஆண்டு தடை? ரிஸ்வானுக்கும் இனி அணியில் வாய்ப்பு இல்லை: இங்கி.க்கு எதிரான டெஸ்ட்டில் காயம் ஏற்பட்டதாக நடிப்பு
லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதில் முதல் 2 டெஸ்ட்டிலும் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்ததால் மூத்த வீரர்களான சல்மான் ஆகா, முகமது ரிஸ்வான், துவக்க வீரர் இமாம்-உல்-ஹக் உள்பட 7 பேர் அதிரடியாக நீக்கப்பட்டு நாடு திரும்ப உத்தரவிப்பட்டது. மேலும் பயிற்சியாளர்களும் அதிரடியாக மாற்றப்பட்டனர். 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ஃபீல்டிங் செய்தபோது இமாம்-உல்-ஹக் காயமடைந்தார். இதனால் அவர் மைதானத்தில் இருந்து வெளியேறிய நிலையில் 2 இன்னிங்சிலும் பேட் செய்யவில்லை.
4ம் நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன் பேட்டிங் பயிற்சி மேற்கொண்டபோதிலும் களம் இறங்கவில்லை. அவர் காயம் ஏற்பட்டுள்ளது போல் நடித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உயர்மட்ட விசாரணைக் குழு ஒன்றை அமைக்கவுள்ளது. இதில் அவர் காயம் ஏற்பட்டுள்ளதாக நடித்தது தெரியவந்தால் 2 ஆண்டுகள் வரை கிரிக்கெட் ஆட தடை விதிக்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த காலங்களில் இதேபோல் பலமுறை காயம்பட்டது போல் நடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள இமாம், தற்போதைய செயல்களுக்காக 2 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்படும் என உறுதியாக கூறப்படுகிறது.
விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானின் ஒழுக்கம் குறித்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கவலை தெரிவித்துள்ளது. இமாமைப் போலவே ரிஸ்வானிடமும் வரும் நாட்களில் விசாரணை நடத்தப்படலாம். பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான அவர் இனி தேசிய அணியில் மீண்டும் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என கூறப்படுகிறது.




