Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தொட்டுப் பார்த்தால் கொழுப்பு...! வெட்டிப் பார்த்தால் ரத்தம்...!! தாவரத்தில் இருந்து இறைச்சியா..? தொழில் நுட்பத்தின் உச்சக்கட்டம்...!

தொட்டுப் பார்த்தால் கொழுப்பு... முகர்ந்து பார்த்தால் இறைச்சி வாடை... வெட்டிப் பார்த்தால் ரத்தம்... ஆனால் இறைச்சி இல்லை... எப்புடி....? என்று கேட்காதீர்கள்...! இதுதான் ‘3D Plant - based Meat Technology’. முழுக்க முழுக்க தாவரம், காய்கறிகள் மூலம் தாவர இறைச்சி அச்சடிக்கப்படும் இந்த தொழில்நுட்பம், விஞ்ஞான உலகை கலக்கி வருகிறது. இறைச்சிக்கு தேவைப்படுவது புரதமும், கொழுப்பும்தான். சோயா, பட்டாணி, கொண்டைக்கடலை போன்றவற்றிலிருந்து புரதத்தையும் காய்கறிகளில் இருந்து கிடைக்கக்கூடிய எண்ணெயையும் (vegetable oil) எடுத்து பேஸ்ட் போன்று அரைக்கின்றனர். கொழு கொழுவென அரைக்கப்பட்ட பசையை அடுக்கு அடுக்காக இறைச்சியை போன்று அச்சடித்து தருகின்றது 3D பிரிண்டர். அச்சடிக்கப்பட்ட இறைச்சியை தொட்டு பார்ப்பதற்கும், முகர்ந்து பார்ப்பதற்கும் ஏன்.., சுவைத்தால்கூட இறைச்சி போன்றே இருக்கின்றது. இதைத்தான் ‘Plant- based Meat’ அல்லது ‘3d Printed Meat’ என்கிறார்கள். அதெல்லாம் சரி. வெட்டிப் பார்த்தாலும் ரத்தம்கூட வருகிறதே. அது எப்படி...? என்று கேட்கின்றீர்களா... பீட்ரூட் ஜூஸ் போன்ற இயற்கையான நிறப்பொருட்களை கொண்டு செயற்கையான ரத்தத்தையும் சோயாவில் இருந்து எடுக்கப்பட்டும் ஹீம் (Soy leghemoglobin) இறைச்சியை போன்று ரத்த சுவையையும், ரத்த வாசனையையும் கொடுக்கிறது. இதைத்தான் ‘Plant - based blood’ என்கிறோம்.

2018-ல் இஸ்ரேலை சேர்ந்த ‘Eschar Ben-shitrit’ மற்றும் ‘Adam Lahav’ இருவரும் சேர்ந்து முதன்முதலில் ‘ரீடிஃபைன் மீட் (Redefine Meat)’ என்ற நிறுவனத்தை தொடங்கினர். இதன் நோக்கம் என்னவென்றால், மிருகங்களை அறுக்காமல் இறைச்சியை தயாரிப்பதற்காகவும், அதிக புரதம் கொண்ட மாற்று உணவை (alternatives) உலகிற்கு வழங்க வேண்டும் என்பதே ஆகும். அதற்கு பிறகு, இஸ்ரேல் நாட்டிலேயே தாவரத்திலிருந்து இறைச்சியை தயாரிக்கும் இரண்டாவது நிறுவனமாக ‘சேவர் ஈட் (Savor Eat )’, ஸ்பெயினில் ‘நோவா மீட் (NovaMeat )’, என்று பல நிறுவனங்கள், பத்து ஆண்டுகளில் உருவாகிவிட்டன. இதன்மூலம், உலகெங்கும் பிரபலமானது ‘3D Plant - based Meat Technology’.

என்னதான் இறைச்சியைப்போலவே சுவை தந்தாலும், இது இயற்கையானது அல்ல; இது அதிகமாக ப்ராசஸ் செய்யப்பட்ட உணவு (Ultra - processed food ) என்றும், இதை தொடர்ந்து உட்கொள்வதால் உடல்நல கோளாறுகள் ஏற்படலாம் எனவும் குற்றம்சாட்டுகின்றனர், பல ஆய்வாளர்கள். அதேபோன்று, அனைவருக்கும் இது இறைச்சியின் சுவையை கொடுக்கவில்லை எனவும், தாவரத்தை தாவரமாக சாப்பிடுவதே சிறந்தது, தாவரத்தை இறைச்சியாக மாற்றுவதற்கு அதிக செயல்பாடுகள் தேவைப்படுவதால் விலையும் அதிகமாக இருக்கின்றது எனவும் விமர்சிக்கின்றனர்.