Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

நீ நினைத்தால் சாதிக்கலாம்!

நான் தோற்று விட்டேன் என்று நீங்களாக சொல்லாத வரையில் நீங்கள் தோற்றுப் போனதாக அர்த்தம் இல்லை. எனக்கு எதுவும் தெரியாது என்று நீங்கள் சொல்லாத வரை நீங்கள் ஒரு பூஜ்ஜியம் என்பது யாருக்கும் தெரியாது. எந்த பிரச்னையையும் உங்களால் உருவம் பெறுகிறதே தவிர வேறு யாரும் உருவாக்கிவிட முடியாது. உங்கள் எண்ணம் என்னும் மரத்தின் நிழல்கள் தான் உங்கள் செயல்கள். ஆக பிரச்னையும், தீர்வும் உங்களிடம் இருந்து உருவாகிறது. முடிவும் பெறுகிறது.

இதைத்தான் சங்கப் புலவன் சொன்னான். ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ ஆம்! நல்லதும் கெட்டதும் நம்மிடமே உள்ள தன்மைகள். நாம் எதை பிறரிடம் வெளிப்படுத்துகிறோமோ அதுவே நம்மிடம் திரும்ப வரும்.

உண்மையில் எல்லைகள் என்று எப்பவும் கிடையாது, அப்படி ஏதும் தோன்றினால் அதை உடைத்து விட்டு முன்னேறு என்றான் மாவீரன் நெப்போலியன்.

அபாயங்களிலிருந்து என்னை காப்பாற்று என்று நான் பிரார்த்திக்க மாட்டேன். அபாயங்களைத் தாங்கும் வளமையைக் கொடு என்று தான் கேட்பேன்.என்னுடைய வலிகளைக் குறை, என்று நான் கேட்க மாட்டேன். வலிகளை தாங்கும் சக்தியை எனக்கு கொடு இறைவா என்று தான் கேட்பேன். வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களுக்கு யார் துணையையும் தேட மாட்டேன். என்னுடைய காலில் இருக்கும் பலத்தை கொடு என்று தான் கேட்பேன். என்னை காப்பாற்றுங்கள் என்று கவலையோடு அழுகுரல் தரமாட்டேன். என்னை காப்பாற்றிக் கொள்ளும் பொறுமை எனக்கு கொடு என்று கேட்பேன்.

உன்னுடைய கருணையை நீ எனக்குத் தரும் மகிழ்ச்சியான தருணங்களில் மட்டும் நினைக்காமல் என்னுடைய தோல்வியில் உன் கரங்களைப் பற்றிக்கொள்ளும் சக்தியை எனக்கு கொடு. இது மகாகவி ரவீந்திரநாத் தாகூர் அவர் களின் பிரார்த்தனை. அவர் இறைவனிடம் கேட்டவைகளை சற்று உங்களுக்குள் அசை போட்டுப் பாருங்கள். நான் நானாக வாழும் தகுதியை எனக்குக் கொடு என்பதே அதன் அடிநாதம்.

உங்களை நீங்கள் தகுதியானவராக ஆக்கிக் கொள்வது தான் நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை. அந்த பக்குவம் உங்களுக்கு வந்துவிட்டால் எதிலும் தோல்வி என்பதை விட எதுவும் தோல்வியாக, தொல்லையாக தெரியாது.

நம்மை நாம் திருத்திக் கொள்வதும் நம்மைப்பற்றி அறிந்து கொள்வதும் மிக அவசியம் ஒரு தோல்விக்குத் துவண்டு போவதை விட என்னால் பல வெற்றிகளை உண்டாக்க முடியும் என்ற நம்பிக்கையே அகத்தில் மகிழ்ச்சியும் வாழ்வில் ஆனந்தத்தையும் சேர்க்கும்.

இரண்டு சுமை ஏற்றிய இரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. டெஸ்டிங் என்ற ஒரு இளைஞர் விபத்துக்கான காரணங்களை ஆராயும் பொருட்டும். அது போன்ற விபத்துக்கள் திரும்பவும் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என பரிந்துரைக்கும் பொருட்டும் நியமிக்கப்பட்டார். அதன் விளைவாக கண்டுபிடிக்கப்பட்டது தான் ‘ஏர் பிரேக்’, ஆகவே ஒவ்வொரு பிரச்னையையும் உங்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு உன்னத வாய்ப்பாகும். உங்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக்காட்ட கிடைத்திருக்கும் அரிய சந்தர்ப்பம். பிரச்னைகளை கண்டு துவண்டு விடாமல் திறந்த மனத்துடன் சிந்தித்தால், பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.உங்கள் திறமையும் வெளி உலகத்திற்கு புறப்படும். இதற்கு உதாரணமாய் இந்த சாதனைப் பெண்மணியை சொல்லலாம்.

இந்திய விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனமான ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’, நாட்டின் முதல் தனியார் சுற்றுவட்ட ராக்கெட்டை கடந்த 18ம் தேதி (ஜூலை 18) அன்று விண்ணில் ஏவியது. ‘மிஷன் ஆகமன்’ எனப் பெயரிடப்பட்ட இந்த திட்டத்தின்கீழ், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

இந்த முயற்சிக்கும், அதன் வெற்றிக்கும் பின்னணியில் பொறியாளர்கள் குழுவில் முக்கியமானவர் பிரித்வி சங்காணி.ராக்கெட்டின் தானியங்கி கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்குவதில் இவர் முக்கியப் பங்காற்றினார்.

குஜராத்தின் விவசாயக் குடும்பப் பின்னணியில் இருந்து வந்த பிரித்வி,தனது கனவுகளையும் விக்ரம் -1 ராக்கெட்டோடு இணைத்து விண்ணில் பறக்க விட்டிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

குஜராத்தின் ஜாம்நகரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் பிரித்வி. சிறுவயதில் இருந்தே பொறியியல் துறை மீது ஆர்வம் கொண்ட இவர், நாட்டின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய தொழில்நுட்பத் துறையில் பணியாற்ற வேண்டும் என்ற இலட்சியத்தோடு வளர்ந்துள்ளார்.

விண்வெளித்துறை பற்றிய எவ்வித பின்புலம் இல்லாத குடும்பத்தில் பிறந்திருந்தாலும், பிரித்வியின் கனவுகள் விண்ணைத் தாண்டி உயர்ந்திருந்தன.அதனால்தான், ராஜ்கோட்டில் தனது பொறியியல் பட்டப்படிப்பை முடித்தப்பின், ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெறுவதற்கான வழியைத் தனக்கானதாக அவர் தேர்வு செய்தார்.

அதன் தொடர்ச்சியாக, புனேயில் முதுகலைப் பட்டம் பெற்ற அவர், மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் விண்வெளித் திட்டங்களில் பயன்படுத்தப்படும் வழிகாட்டுதல், வழிசெலுத்தல் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளில் நிபுணத்துவத்தைப் பெற்று உள்ளார்.

படித்து முடித்ததும், தனியார் விண்வெளித் துறையில் நுழைவதற்கு முன்பு, பிரித்வி தனது தொழில்முறைப் பயணத்தை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (DRDO) திட்டப் பொறியாளராகத் (Project Engineer) தொடங்கினார்.

அந்தக் காலகட்டத்தில், இந்திய ஏவுகணை மேம்பாட்டுத் திட்டங்களில் அவர் பங்காற்றியதுடன், சிக்கலான பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள் சார்ந்த நேரடி அனுபவங்களையும் பெற்றார். ஏற்கனவே ஒரு மதிப்புமிக்க பணியில் இருந்தபோதிலும், இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் தனியார் விண்வெளித் துறை புரட்சியின் ஒரு பகுதியாக இருக்க விரும்பிய அவர், இந்திய விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனமான ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ நிறுவனத்தில் இணைந்தார்., அந்த நிறுவனத்தில் ‘மிஷன் ஆகமன்’ திட்டக் குழுவின் ஒரு பகுதியாகப் பணியாற்றினார்.

ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்-ல் பிரித்வி, விக்ரம்-1 இன் தானியங்கி விமானக் கட்டுப்பாட்டு அமைப்பிற்கான ‘கட்டுப்பாட்டு அமைப்புத் தலைவர்’ என்ற பொறுப்பில் இருந்தார். ராக்கெட்டின் மிக முக்கியமான கூறுகளில் ஒன்றான இந்தத் தானியங்கி அமைப்பு, ராக்கெட் பறக்கும்போது அதைத் தொடர்ந்து கண்காணிப்பதோடு,துல்லியமான கட்டுப்பாட்டு மாற்றங்களைச் செய்வதன் மூலம் அது திட்டமிடப்பட்ட பாதையிலேயே செல்வதை உறுதி செய்ய உதவுகிறது.

வெற்றிகள் எப்போதுமே ஒரு பயணத்தின் முடிவாக இருப்பதில்லை.தொடர்ந்து தங்கள் தேடுதலை விரிவுபடுத்தி, அதில் மேலும் பல வெற்றிகளைக் குவிப்பதுதான் வெற்றியாளர்களின் வழக்கம்.

பிரித்வியும் அதுபோலவே, இந்தியாவின் மிகப்பெரிய தனியார் விண்வெளித் துறை மைல்கற்களில் ஒன்றான இந்த விக்ரம் -1ன் வெற்றியைத் தொடர்ந்து, விண்வெளி தொழில்நுட்பங்களில் தனது நிபுணத்துவத்தை மேலும் வளர்த்துக் கொள்வதற்காக, மேற்படிப்பிற்கு வெளிநாட்டிற்கு சென்றுள்ளார்.

விவசாயப் பின்னணியில் இருந்து வந்தபோதும், தனது கடின உழைப்பு மற்றும் தொடர் தேடல்கள் மூலம் விண்வெளித் துறையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறார் பிரித்வி.

இந்தியாவில் தனியார் விண்வெளித் துறை சார்ந்த சூழலமைப்பு தொடர்ந்து விரிவடைந்து வரும் சூழலில், அத்துறையில் உள்ள வேலைவாய்ப்பை சிறிய நகரங்களைச் சேர்ந்த பொறியாளர்களும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதற்கு பிரித்வி ஒரு சான்று.

பொருளாதாரமோ, வாழ்க்கை முறையோ எந்த ஒரு முயற்சிக்கும் எப்போதுமே தடையாக இருப்பதில்லை என, விண்வெளிப் பொறியியல், ராக்கெட் தொழில்நுட்பம் அல்லது விண்வெளி ஆய்வுத்துறைகளில் பணிபுரியக் கனவு காணும் மாணவர்களுக்கு பிரித்வியின் வாழ்க்கை மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும். விண்வெளித்துறையில் தடம் பதித்து சாதிக்க வேண்டும் என்று பிரத்வி நினைத்தார், அதனால் சாதித்தார், இவரை போலவே நீங்களும் நினைத்தால் சாதிக்கலாம் என்பதுதான் இவருடைய வாழ்க்கை நமக்கு உணர்த்தும் உன்னத பாடமாகும்.