சிலை கடத்தல் வழக்கில் முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கியது மதுரை ஐகோர்ட் கிளை
அதில், “டிஎஸ்பி-யான காதர்பாட்ஷா தொடர்ந்த வழக்கில் டிஐஜி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை கொண்டு என் மீதான புகார் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கு மாறாக சிபிஐ எஸ்பி என் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். எனவே இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில், “மனுதாரர் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொன்.மாணிக்கவேலை கைது செய்து காவலில் எடுத்து விசாரித்தால் தான், அவருக்கும் சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூருக்கும் உள்ள தொடர்பு குறித்து தெரிய வரும். எனவே முன்ஜாமீன் வழங்கக்கூடாது” என வாதிடப்பட்டது.
இந்த மனு நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில், “உயர் நீதிமன்ற உத்தரவுபடியே பொன்.மாணிக்கவேல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கப்படும்” எனக் கூறப்பட்டது. பொன்.மாணிக்கவேல் தரப்பில், “என்னுடைய பணிக்காலத்தில் ஏராளமான சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. என் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. எனவே, முன் ஜாமீன் வழங்க வேண்டும்” எனக் கோரப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, “பொன்.மாணிக்கவேல் மீது ஜாமீன் வழங்கக் கூடிய பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளதா அல்லது ஜாமீன் வழங்க முடியாத பிரிவுகள் பதியப்பட்டுள்ளதா என்பது குறித்து விளக்கம் தேவைப்படுகிறது. இது தொடர்பாக ஆவணங்களை சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில் நாளை (ஆக.30) தீர்ப்பு வழங்கப்படும்” என உத்தரவிட்டார்.
இந்நிலையில் இன்று மனுவை விசாரித்த நீதிபதிகள் சிலை கடத்தல் வழக்கில் முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு நிபந்தனையுடன் மதுரை ஐகோர்ட் கிளை முன்ஜாமின் வழங்கியது. 4 வாரங்களுக்கு தினந்தோறும் சிபிஐ அலுவலகத்தில் சென்று கையெழுத்து இடவேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூருக்கு ஆதரவாக பொன் மாணிக்கவேல் செயல்பட்டதாக டிஎஸ்பி காதர் பாட்ஷா குற்றசாட்டு வைத்துள்ளனர். சிலை கடத்தல்காரர்களுக்கு உதவுவதற்கே போலீசார் மீதே பொன் மாணிக்கவேல் பொய் வழக்கு பதிவு செய்ததாக குற்றசாட்டு வைத்துள்ளார்.