Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

வாய்ப்புகளைக் கண்டறியுங்கள், வெற்றி நிச்சயம்!

ஸ்டீவ் ஜாப்ஸ் ஓர் அதிர்ஷ்டசாலி,அவர் எதை விரும்பினாரோ அதை செய்வதற்கான வாய்ப்பு அவருக்கு 20 வயதாகும்போதே கிடைத்தது. அவருடைய நண்பருடன் சேர்ந்து ஆப்பிள் நிறுவனத்தை ஆரம்பித்தார். அவர்கள் கடினமாக உழைத்ததால் அடுத்த புத்தாண்டு களில் இரண்டு பேராக இருந்த நிலையில் இருந்து நான்காயிரம் பேராகவும், இரண்டு பில்லியன் டாலர்கள் வருமானம் கொண்ட நிறுவனமாகவும் வளர்ச்சி அடைந்தார்கள்.

அந்தக் காலகட்டத்தில் தான் அவர்களது ஒப்பற்ற படைப்பான ‘மெக்கின்டாஷ்,’ சந்தையில் அறிமுகப்படுத்தினார்கள். அந்த நேரத்தில் தான் அவர் நிறுவிய நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவே அவரை வேலையில் இருந்து நீக்கியது.அவர் நிறுவிய நிறுவனமே அவரது 30 வயதில் அவரை வெளியேற்றியது.அவர் வெளியேற்றப்பட்ட உடன் சில மாதங்கள் அவருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.சமூகத்தில் அவர் தோல்வி அடைந்தவராகப் பார்க்கப்பட்டார்.

அவர் சிலிகான்வேலியை விட்டே ஓடிப் போய் விடலாமா என்று கூட நினைத்தார்.ஆனால் ஏதோ ஒன்று அதை எல்லாம் செய்ய விடாமல் அவரை தடுத்தது நடந்த நிகழ்வுகள் ஆப்பிளில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை அவர் நிராகரிக்கப்பட்டார். ஆனால் அவருக்குள் இருந்த உத்வேகம் அப்படியே இருந்தது. எனவே புதிதாக ஒன்றை ஆரம்பிக்கலாம் என நினைத்தார். வெற்றி என்கிற உக்கிரத்தை ஆரம்பம் என்கிற மென்மை மாற்றி அமைத்தது.

அவர் இதை அப்போது நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.ஆனால் ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து விலக்கப்பட்டது அவரை அதிகபடைப்பாற்றல் கொண்டவராக மாற்றியது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் அவர் நெக்ஸ்ட் என்கின்ற நிறுவனத்தையும், பிக்ச்சர் என்கிற நிறுவனத்தையும் ஆரம்பித்தார். டாய்ஸ் ஸ்டோரி என்ற பெயரில் உலகத்திலேயே முதன்முதலாக கம்ப்யூட்டர் அனிமேட்டட் முழு நீளத் திரைப்படத்தைத் தயாரித்து வெளியிட்டார். அதற்கு அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளால் ஆப்பிள் நிறுவனமே நெக்ஸ்ட் ஐயும் வாங்கியது. அவரும் ஆப்பிளுக்கு திரும்பினார். நெக்ஸ்ட் நிறுவனத்தில் அவர்கள் உருவாக்கிய தொழில்நுட்பம் தான் ஆப்பிள் நிறுவனத்தின் இன்றைய மறுமலர்ச்சிக்கான இதயமாக இருக்கிறது.

ஸ்டீவ் ஜாப்ஸ் நமக்குச் சொல்லும் வார்த்தைகள், நான் ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து நீக்கப்படவில்லைஎனில் மேலே சொன்ன எதுவும் நடந்திருக்காது. மருந்து கசப்பாகத்தான் இருக்கும். ஆனால் நோயாளி குணம் பெற அது தேவை. சில சமயங்களில் வாழ்க்கை உங்கள் தலையில் சம்மட்டியால் அடிக்கும். அதற்காக நம்பிக்கை இழந்து விடாதீர்கள். நான் எதைச் செய்தேனோ அதை நேசித்தேன். அதுதான் என்னை முன்னோக்கி இட்டுச் சென்றது. நீங்கள் எதை விரும்புகிறீர்கள் என்பதைக் கண்டறியுங்கள். உங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியை உங்கள் வேலை எடுத்துக் கொள்ளும். எனவே, அதில் முழு திருப்தி அடைவதற்கு நீங்கள் உங்கள் வேலையை நேசியுங்கள். அப்படி எதுவும் உங்களுக்கு இதுவரை அமையவில்லை என்றால் தொடர்ந்து தேடிக் கொண்டே இருங்கள்.அதுவரை செட்டில் ஆகாதீர்கள். நீங்கள் எப்போது அதை கண்டு பிடிக்கின்றீர்கள் என்பதை உங்கள் இதயம் காட்டிக் கொடுக்கும். எனவே நீங்கள் தேடுவது கிடைக்கும் வரை ஓய்ந்துவிடாதீர்கள். தேடிக் கொண்டே இருங்கள். இதுதான் ஸ்டீவ் ஜாப்ஸ் சொன்ன வார்த்தைகள். இவரைப் போலவே இன்றைய காலத்திலும் வாய்ப்புகளைத் தேடித் தேடி, கண்டறிந்து வெற்றி பெறுபவர்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இதற்கு உதாரணமாக இந்த சாதனைப் பெண்மணியை சொல்லலாம்.

கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் உள்ள பெருவயல் பகுதியைச் சேர்ந்தவர் ஆதிரா. இவரது பெற்றோர்களான சுகதனும், மினியும் எல்ஐசி முகவர்கள். மருத்துவம் படிப்பதுதான் ஆதிராவின் கனவாக இருந்தது. அரசுப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு நிறைவு செய்த அவர், நினைத்தது போலவே, பெங்களூருவில் பல் மருத்துவக் கல்லூரியில் பிடிஎஸ் சேர்ந்தார்.

நன்றாக சென்று கொண்டிருந்த அவரது வாழ்க்கையில் 2016ம் ஆண்டு விபத்து வடிவில் விதி சதி செய்தது. நண்பர்களோடு சேர்ந்து இருசக்கர வாகனத்தில் சென்ற போது, எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கினார் ஆதிரா. மோசமான அந்த விபத்தால், வெண்டிலேட்டர் சிகிச்சைக்கு செல்லும் அளவிற்கு மோசமானது அவரது உடல்நிலை.மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பால், கொஞ்சம் கொஞ்சமாக அவரது உடல்நிலை தேறினாலும், பழைய நினைவுகளை இழந்தது அவரது மூளை. கூடவே அவரது கால்களும் பக்கவாதத்தால் செயலிழந்தன.

சுமார் 2 ஆண்டுகள் தன்னைப் பற்றிய நினைவுகள் எதுவும் இன்றி, அம்னீசியாவின் பிடியில், சக்கர நாற்காலியில் சிக்கித் தவித்தார் ஆதிரா. இம்முறை ஆயுர்வேத மருத்துவம் அவருக்குக் கை கொடுத்தது.கொஞ்சம் கொஞ்சமாக பழைய நினைவுகள் திரும்பி வர ஆரம்பித்தன.

இது ஏறக்குறைய மறுபிறவிதான்.எனவே, நினைவு திரும்பியதும், மீண்டும் பிடிஎஸ் படிப்பைத் தொடர முடிவு செய்து பெங்களூருவுக்குத் திரும்பினார். அவரை கவனித்துக் கொள்வதற்காக அவரது குடும்பத்தினர் ஒரு பராமரிப் பாளரை ஏற்பாடு செய்தனர்.

முதல் 3 ஆண்டுகள் தான் படித்தது மறந்து போனாலும், மீண்டும் அவற்றை நினைவிற்கு கொண்டு வந்து,தனது இறுதி ஆண்டுத் தேர்வுகளை வெற்றிகரமாக எழுதினார்.தனது விடாமுயற்சியின் பலனாக, வெற்றிகரமாக பிடிஎஸ் படிப்பை நிறைவு செய்து, 2020ம் ஆண்டு கோழிக்கோடு திரும்பினார்.

கொரோனா பெருந்தொற்றுக் காலமான அப்போது ஒரு அரசு சாரா நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது.அப்போது தான் சந்தித்த மனிதர்களும், அதில் கிடைத்த அனுபவங்களும்தான் தன்னை சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுத காரணமாக அமைந்தது என பல் மருத்துவரான தன்னை, கலெக்டராக மாறத் தூண்டிய சம்பவங்கள் என்கிறார் ஆதிரா.

சவால்களும், தடைகளும் ஆதிராவுக்கு பழக்கமானவைகள்தான் என்பதால், மருத்துவராக இருந்து கொண்டே, சிவில் சர்வீஸ் தேர்வு களுக்கும் அவர் ஆயத்தமாகத் தொடங்கினார். தனது நான்காவது முயற்சியில், இந்தாண்டு வெற்றிகரமாக யுபிஎஸ்சி தேர்வில் 483வது இடத்தைப் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

ஆதிராவின் இந்த வெற்றியில், அவரது குடும்பத்தினருக்கும், குறிப்பாக அவரது தங்கை அனகாவிற்கும் பெரும் பங்கு உண்டு. விபத்திற்குப் பிறகு ஆதிராவிற்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, தான் படித்து வந்த பிஎஸ்சி சைக்காலஜி படிப்பைப் பாதியில் விட்டு விட்டு, பிஎஸ்சி நர்சிங் சேர்ந்து படித்துள்ளார் அவரது தங்கை.

எனது வெற்றிக்கு பின் எனது தங்கையின் தியாகமும், மாபெரும் அர்ப்பணிப்பும் உள்ளது. அவர் எனது தங்கை மட்டுமல்ல... எனது சிறந்த தோழியும் ஆவார். யுபிஎஸ்சி நேர்காணலில் போது கூட, எனது சிறந்த தோழி யார் என்ற கேள்விக்கு, நான் என் தங்கையின் பெயரைத்தான் கூறினேன்,” என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் ஆதிரா.

தனது இருபது வயதில் பல் மருத்துவம் படித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விபத்தில் சிக்கி, வெண்டிலேட்டரில் இருந்து மீண்டும், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, 2 ஆண்டுகள் தன் சுயநினைவையே இழந்தபோதும், தன்னம்பிக்கையால் மீண்டும் தொடக்கத்தில் இருந்து ஆரம்பித்து, மருத்துவம் படித்து முடித்து, இன்று தனது 30 வயதில் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று உயர் பதவியை அலங்கரிக்க உள்ள ஆதிராவின் சாதனை மகத்தானது. யுபிஎஸ்சி தேர்வில் சாதிக்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கக் கூடிய இன்றைய இளைஞர்களுக்கு இவருடைய வாழ்க்கை ஒரு மிகச்சிறந்த உன்னத பாடமாகும். சாதிக்கத் துடிக்கும் சாதனையாளர்களே! வெற்றிக்கான வேட்கையில் ஓடும் வீரர்களே!வாய்ப்புகளை கண்டறியுங்கள், வெற்றி நிச்சயம்!