மனைவி ஐபிஎஸ் அதிகாரி; 40 சொகுசு பங்களா வாங்கி குவித்த ஐஏஎஸ் அதிகாரி: ராஜஸ்தான் பாஜக ஆட்சியில் நடந்த முறைகேடு
20 சொகுசு பங்களாக்களையும், 20 காட்டேஜ்களையும் வெறும் 6.16 கோடி ரூபாய்க்கு வாங்கி குவித்துள்ளனர்
ஜெய்ப்பூர்: ஒரே நிறுவனத்திடம் 40 சொகுசு பங்களாக்களை வாங்கி மீண்டும் அதே நிறுவனத்திற்கு வாடகைக்கு விட்ட முறைகேடு புகாரில், ராஜஸ்தான் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஷிகர் அகர்வால் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தானில் கடந்த 1993ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான ஷிகர் அகர்வால், அம்மாநிலத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க அதிகாரிகளில் ஒருவராக வலம் வந்தார். தற்போதைய பாஜக முதல்வர் பஜன்லால் சர்மாவின் கூடுதல் தலைமைச் செயலாளராக பணியாற்றிய இவர், பின்னர் திடீரென மாற்றப்பட்டு தொழில் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், ரீகோ மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் தலைவர் என பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார். இந்நிலையில், குடும்பத்தினருடன் சேர்ந்து நடத்திய பெரும் சொத்து குவிப்பு விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து, அவர் வகித்து வந்த அனைத்து அரசு பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டு, பணி ஒதுக்கீடு காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.
அதிகாரப்பூர்வமாக ‘நிர்வாக காரணங்களுக்காக’ இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், ஊடகங்களில் வெளியான புலனாய்வு தகவல்களே இந்த திடீர் நடவடிக்கைக்கு முக்கிய காரணமாகும். முன்னதாக, ராஜஸ்தான் அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் ‘கோயல் ஃபேஷன்ஸ்’ என்ற தனியார் நிறுவனத்திற்கு வரி விலக்குகள் மற்றும் ஊழியர் சம்பள மானியம் உள்ளிட்ட பல்வேறு தனிப்பயன் சலுகைகள் அள்ளி வழங்கப்பட்டன. அந்த சலுகைகள் அளிக்கப்பட்ட அதே காலகட்டத்தில், ஷிகர் அகர்வால், அவரது மனைவியான ஐபிஎஸ் அதிகாரி பிரஷாகா மாத்தூர், இரு மகன்கள் மற்றும் மாமனார் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து, அந்த நிறுவனத்திடம் இருந்து அல்வார் மாவட்டம் அஜப்கரில் 20 சொகுசு பங்களாக்களையும், உதய்பூர் புஜ்தா பகுதியில் 20 காட்டேஜ்களையும் என மொத்தம் 40 சொகுசு வீடுகளை வெறும் 6.16 கோடி ரூபாய்க்கு வாங்கி குவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, வாங்கிய அந்த 40 பங்களாக்களையும் மீண்டும் அதே நிறுவனத்திற்கே ஆண்டிற்கு 1.80 கோடி ரூபாய் வாடகைக்கு குத்தகைக்கு விட்டு ஆதாயம் அடைந்துள்ளனர். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி லஞ்ச ஆதாயத்திற்கு ஈடாக இந்த சொத்துக்கள் வாங்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


