Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஹைட்ரோபோனிக்ஸ் விவசாயம்!

விவசாயத்திற்கு இது இதெல்லாம் அவசியம் என காலம் காலமாக சில விதிகள் வகுக்கப்பட்டு, அதன்படியே விவசாயம் நடந்து வந்தது. ஆனால் இப்போது அந்த விதிகள் உடைக்கப்பட்டு புதுப்புது தொழில்நுட்பங்களின் மூலம் புரட்சி நடந்து வருகிறது. அவற்றில் ஒன்றுதான் ஹைட்ரோபோனிக்ஸ் டெக்னாலஜி. மண்ணில்லாமல் நேரடியாகத் தண்ணீர் மூலம் செடிகளை வளர்க்கும் முறைதான் இந்த ஹைட்ரோபோனிக்ஸ் டெக்னாலஜி. இந்த முறையில் பி.வி.சி போன்ற பிளாஸ்டிக் பைப்களில் குறிப்பிட்ட இடைவெளி விட்டு அதில் துளைகள் இட்டு சல்லடை போன்ற பிளாஸ்டிக் கப்களை வைத்து விவசாயம் செய்யலாம். இதில் செடி நிற்க சிறிதளவு களிமண் உருண்டைகளைப் போட வேண்டும். களிமண் பெரும்பாலும் நீரில் கரையாது. ஆனால் நீரை உறிஞ்சி தன்னுள் தக்க வைத்துக் கொள்ளும். இதில் செடிகளை நடவு செய்யும்போது செடிகளின் வேர்ப்பகுதிக்கு நேரடியாக காற்றும் தண்ணீரும் கிடைக்கும். தாவரங்களை மண் இல்லாமல் வளர்க்கும் ஏரோபோனிக்ஸ் முறையில் காற்று நிறைந்த பி.வி.சி. பைப்புகளுக்குள் செடிகள் மிதந்தவாறு இருக்கும். இதனால் பயன்படுத்தப்படும் தண்ணீரின் அளவு அதிகமாகக் குறைகிறது. இதிலிருந்து வெளியேறும் நீர் சைக்கிள் முறையில் மீண்டும் மறுசுழற்சி செய்யப்படுவதன் மூலம் செடிகளுக்கு பயன்படுத்தப்பட முடியும்.

செடிகள் வளர்வதற்கு தேவையான சத்துக்களை தண்ணீருடன் சேர்த்து செலுத்தும்போது செடிகள் நன்றாக செழித்து வளரும். அதேபோல பசுமைக் குடில்களில் வளர்க்கும்போது, பறக்கும் பூச்சிகளினால் செடிகளுக்கு ஏற்படும் நோய்கள் இந்த முறையில் வருவதில்லை. ஹைட்ரோபோனிக்ஸ் முறை மூலம் பூச்சிக்கொல்லி மருந்துகள் தேவைப்படாத நவீன முறை இயற்கை விவசாயம் செய்ய முடியும். இதற்கு தனியாக தண்ணீர் விட வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த முறையில் பராமரிப்பு செலவு அதிகம் பிடிக்காது. வேலை ஆட்கள் தேவைப்படாது. செடிகளைப் பராமரிப்பதும் எளிது. ஏக்கர் கணக்கில் இடங்கள் தேவைப்படாது. வீடுகளின் மாடிகளில் வளர்க்கலாம். வீட்டிற்கு வெளியே அழகுக்கு வளர்க்கப்படும் செடிகளைப் போலவும் வளர்க்கலாம். இந்த முறையில் நாம் அன்றாடம் உணவுக்குப் பயன்படுத்தும் கொத்தமல்லி, புதினா, கீரை வகைகள் மற்றும் காய்கறிகளை வளர்க்கலாம்.