Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஹைதராபாத்தில் செவிலியர் மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தால் அதிர்ச்சி!

ஹைதராபாத்: மருத்துவமனை ஓய்வறையில் செவிலியர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சமத்துவம் மருத்துவமனை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண், கடந்த எட்டு மாதங்களாக தூக்குடாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறார். மருத்துவமனை அதிகாரிகள், இரவு நேரத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ஓய்வெடுப்பதற்காக மருத்துவமனையின் பின்புறம் தங்கும் அறைகளை ஒதுக்கியிருந்தனர்.

வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் தனது பணிகளை முடித்த பிறகு, இரவு பணி ஓய்வின் ஒரு பகுதியாக அந்த செவிலியர் மருத்துவமனை வளாகத்தில் தனக்காக ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்றுள்ளார். அவர் தொலைதூரப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால், மருத்துவமனை வளாகத்தில் உள்ள அந்த அறையில் அவர் மட்டுமே தங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது.

சனிக்கிழமை மதியம் வரை அவர் அறையை விட்டு வெளியே வராததுடன், தொலைபேசி அழைப்புகளுக்கும் பதிலளிக்காததால் மருத்துவமனை ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, ஜன்னல் வழியாகப் பார்த்தபோது அவர் எந்தவித அசைவும் இல்லாமல் இருந்தது தெரியவந்தது.

தகவல் கிடைத்ததும் பகாடி போலீசாரும், ஷம்ஷாபாத் துணை காவல் ஆணையர் ராஜேஷும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.இந்த விசாரணையில் செவிலியரின் முகம் மற்றும் கால்களில் பலத்த காயங்கள் இருந்ததும், செவிலியர் கொலை செய்யப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் சம்பவ இடத்தில் இருந்து முக்கிய ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன. பின்னர் அவரது உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

முதற்கட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையில், செவிலியர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், மருத்துவமனைக்கு அருகே பைக் மெக்கானிக்காகப் பணியாற்றி வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 35 வயதான சனா உல்லா என்பவரைப் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், செவிலியரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை சனா உல்லா ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். செவிலியர் தினமும் தனியாக மருத்துவமனை வளாகத்தில் தங்கும் அறைக்குச் செல்வதை நோட்டமிட்டு, இந்த கொடூரச் சம்பவத்தை பைக் மெக்கானிக் அரங்கேற்றியதாகக் கூறப்படுகிறது.

பாலியல் வன்கொடுமையின்போது செவிலியரை தாக்கியதில் அவர் உயிரிழந்ததாகவும், இதையடுத்து அவரது உடலை அறையிலேயே விட்டுவிட்டு சனா உல்லா தப்பிச் சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்துக்குப் பிறகும் எதுவும் தெரியாததுபோல் அதே பகுதியில் சனா உல்லா சுற்றித்திரிந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவரைக் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.