அம்மா என்றால் தெய்வம். தெய்வம் என்றால் புனிதம். உயிர் சுமந்து பெற்றுக்கொடுப்பதற்கு மட்டுமேகூட அந்த இடத்தைக் கொடுத்து விடலாம். ஆனால் கொடுப்பது இல்லை.
தொடர்ந்து அவள் தெய்வமாக, புனிதமாக இருக்க வேண்டும் என்றால் தியாகம் செய்துகொண்டே இருக்க வேண்டும். வாழும்வரை அல்லது சாகும்வரை!
தியாகம் என்றால் அவளுக்கான வாழ்க்கையை அவள் வாழக்கூடாது.அப்படி வாழாமல் வாழ்ந்து செத்துப் போனால் அந்த தெய்வத் தன்மையும் புனிதத்தன்மையும் ஒருவேளை... உறுதி செய்யப்படலாம்.
புனித பட்டங்களுக்குப் பின்னால் இந்த, கண்ணீரின் காய்ந்த உப்புதான் இருக்கிறது.
‘பிள்ளைகள் உங்களிடம் இருந்து வரவில்லை; உங்கள் மூலம் வருகிறார்கள். அம்புட்டுதான்..’ என்று நவநாகரீக எலைட் அறிவுரை சொல்லும் மாற்றுச் சிந்தனை கூட்டம் கூட , ‘உங்கள் அம்மா உங்களைக் பெத்து வளர்க்க மட்டும் பிறக்கவில்லை ; அவர்கள் வாழவும்தான்’ என்று சொல்வது இல்லை. இனி சொல்லணும் என்கிறது நூறு சாமி.
‘அம்மாவை தெய்வமாகப் பார்த்தது போதும். மனுஷியாகப் பாருங்கள். அவர்கள் வாழ்க்கையை அவர்களை வாழ விடுங்கள். அவர்கள் விருப்பப்படி அவர்கள் வாழ்க்கையை அமைத்துக் கொடுங்கள்’ என்கிறது படம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வலையாம்பட்டு கிராமத்தில் செல்வி என்ற விதவைப் பெண்ணுக்கு அவரது பாஸ்கர், விவேக் என்ற இரண்டு மகன்கள். ஏழுமலை என்பவரை திருமணம் செய்து வைத்ததன் நிஜ போராட்டத்தை திரை மூலம் நமக்கு கடத்துகிறார் இயக்குனர் சசி.
செல்வியின் கிராமத்து வீட்டில் கேமராக்கள் பொருத்தி, போன் வழியே மகன்களுடன் உரையாடுவது, வேலைக்குப் போகும் இடத்தில் செல்வி பொட்டு வைத்துக் கொள்வது என்று நவீன கிராம மாற்றங்களை அழகாக பதிவு செய்கிறார் சசி. கரும்புக்காடு உள்ளிட்ட கிராமத்துப் பின்புலங்களையும் சிறப்பாக திரையில் கொண்டு வருகிறார்.
பணக்காரர்களும் பிளாக் காபி குடிக்கிறார்கள். ஏழைகளும் வரக்காப்பி குடிக்கிறார்கள் காபி ஒன்றுதான் ஆனால் காரணங்கள் வேறு என்ற காட்சி.... எலியைப் பொறி வைத்து பிடித்தபடி - ஒற்றை அறை வீடு என்ற எலிப்பொறிக்குள் சிக்கிய எலியாக - செல்வி நிற்கும் காட்சி.
யாருமில்லாத் தனிமையில் செல்வி மின் விசிறியோடு பேசிக் கொண்டு இருப்பது, இவை யாவும் சசியின் சிக்னேச்சர் காட்சிகள்.
மொத்தப் படத்தையும் தூக்கி சுமக்கிறார் செல்வியாக நடித்து இருக்கும் ஸ்வாசிகா. விருதுக்குரிய நடிப்பைக் கொடுத்துள்ளார் வாழ்த்துக்கள்.
கரும்பு வெட்டும் வேலையில் கைதேர்ந்த, எந்த சூழலையும் இயல்பான சந்தோஷத்தோடு எதிர்கொள்கிற, பெண்களை மதிக்கிற, பெரியம்மாவை குளிப்பாட்டி பராமரிக்கும் வேலையை தானே செய்கிற. நல்லவன் ஏழுமலை கேரக்டரில் விஜய் ஆண்டனி.
சமுதாயத்துக்கு தேவையான கேரக்டரில் அஜய் திஷான் சிறப்பாக நடித்துள்ளார். சக்தி, பாடினி குமார், காவ்யா அனில், கருணாஸ் ஆகியோரும் இயல்பு. கவனிக்க வைக்கிறார் தாமரை.
தன்னை தவறாக பார்க்கும் ஒரு நபரின் முன் ஒரு பெண் தனது மறுமணம் பற்றிய கருத்தை முதன்முதலில் சொல்வாரா என்ற கேள்வி ஆரம்பத்திலேயே வருகிறது.
ஆணுக்கான மறுமணத்தை கிட்டத்தட்ட கட்டாயம் மட்டும்தான் ஆக்கவில்லை. அந்தளவுக்கு சிங்கிளாக இருக்கும் தந்தைகள் குறைவு. ஆனால் சிங்கிள் தாய்கள் அதிகம். மறுமணம் என்பது ஆணுக்கு மட்டும் உரிமையான ஒரு
விஷயம் போலவும், பெண்ணுக்கு அது பெரும்பாவம் போலவும் இன்னமும் சித்தரித்து வைத்திருக்கும் கிராமங்கள் ஏராளம். அதில் கள்ளக்குறிச்சி வலையாம்பட்டு கிராமமும் ஒன்றாக இருந்து ஏழுமலை - செல்வி இருவரின் மூலம் அந்த மூடநம்பிக்கை தகர்த்தெறியப்பட்டிருக்கிறது. 35 வயது என்ன 42 வயதென்ன நமக்கென ஒரு துணை வேண்டும் என ஆண் நினைக்கும்போது பெண் நினைக்கக் கூடாதா என அமைதியாக பெண்ணிய வகுப்பெடுக்கிறது நூறு சாமி.
‘‘ஐயோ, என் புள்ளைக வந்து உட்கார்ந்து சாப்பிட இனி நாளைல இருந்து வீடு இருக்காதே‘‘, எங்க போவாங்க, நான் எங்கேயும் போகலை ‘‘என உடைந்து அழும் இடம் பல பெண்களின் காலில் கட்டப்பட்ட சங்கிலிகளின் குரலாகக் கேட்கிறது.
‘‘ மாற்றம் வேணும்ன்னு கேட்டா பத்தாது, அதுக்கு நாம முயற்சி செய்யணும். என்பதும் செல்விக்குப் பிறகு அந்த ஊரிலேயே ஒரு 20 வயது விதவைப் பெண்ணுக்கு அவருடைய மாமனாரே மாப்பிள்ளை பார்ப்பது வரை திரைக்கதை நம்மையும் அறியாமல் கண்கலங்க வைக்கிறது. தனக்கு பிடிக்காத வாழ்க்கையில் இருந்து வெளியேறும் உரிமை எப்படி எல்லோருக்கும் உண்டோ, அதே போல் எந்த வயதிலும் தனக்கான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் உரிமையும் ஆண்- பெண் இருவருக்கும் உண்டு என்கிற கருத்தை மிக அழுத்தமாக எடுத்து வைத்த விதத்தில் ‘‘நூறு சாமி” இந்த மாடர்ன் யுகத்திலும் தேவைப்படும் சமூக விழிப்புணர்வு படமாக மாறியிருக்கிறது.
(மகளிர் மலர் குழு)
