செங்கடலில் ஹவுதிகள் அட்டகாசம்; இந்திய கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்: மூழ்கிய 14 மாலுமிகள் பத்திரமாக மீட்பு
புதுடெல்லி: செங்கடலில் இந்திய சரக்கு கப்பல் மீது நடந்த ஏவுகணை தாக்குதலில் கப்பல் மூழ்கிய நிலையில், அதில் இருந்த 13 இந்தியர்கள் உள்ளிட்ட 14 மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். ஏமனின் ஹொடைடா துறைமுக நகருக்கு தெற்கே 13 நாட்டிக்கல் மைல் தொலைவில் உள்ள செங்கடல் பகுதியில் ‘எம்எஸ்வி பைஸ் நூரே ஒலியா’ என்ற இந்திய கொடியுடன் கூடிய இயந்திரப் படகு நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பாய்ந்து வந்த ஏவுகணைத் தாக்குதலால் நிலைகுலைந்த அந்தக் கப்பல் கடலில் தலைகீழாகக் கவிழ்ந்து மூழ்கியது.
இதில் பயணம் செய்த 13 இந்திய மாலுமிகள் மற்றும் 1 ஏமன் நாட்டைச் சேர்ந்தவர் என மொத்தம் 14 மாலுமிகள் கடலில் தத்தளித்தனர். தகவலறிந்த ஏமன் நாட்டின் தேசிய பாதுகாப்புப் படை மற்றும் கடலோரக் காவல் படையினர் இணைந்து உடனடியாக கூட்டு மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு, 14 பேரையும் பத்திரமாக மீட்டு மோகா துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று மருத்துவ உதவிகளை வழங்கினர். இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால், ‘இந்திய சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட இந்த அநியாயத் தாக்குதலை இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது. மீட்கப்பட்ட 14 மாலுமிகளும் பாதுகாப்பாக உள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சர்வதேச கடல்வழிப் பாதைகளில் வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் சூழலில், இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


