அண்ணாநகர்: சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பாலமுகுந்தன்(57). இவர் திருமங்கலம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில், ‘’எனது வீட்டின் பூட்டை உடைத்து 16 ஆயிரம் ரூபாய், வெள்ளி டம்ளர், 2 செல்போன்கள் மற்றும் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த சில்லறை காசுகளை கொள்ளையடுத்து சென்றுவிட்டனர்’ என்று தெரிவித்திருந்தார்.
இதன் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் முத்து தலைமையில் போலீசார் வழக்குபதிவு செய்து கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது 3 பேரின் அடையாளம் தெரிந்தது. இதைவைத்து பாடி டிவிஎஸ்.காலனி பகுதியை சேர்ந்த பிரபல கொள்ளையன் ஆகாஷ்(20) மற்றும் இவரது கூட்டாளிகளான 2 சிறுவர்களை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 16 ஆயிரம் ரூபாய், வெள்ளி டம்ளர், 2 செல்போன்கள் மற்றும் சென்ட் பாட்டில்கள், பட்டாக்கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பின்னர் ஆகாஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இரண்டு சிறுவர்களை சென்னை கெல்லீஸ் உள்ள சிறுவர்கள் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.
