Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோயில் அருகே சிறுவர் பூங்காவில் சிதிலமான விளையாட்டு உபகரணங்கள்

*சீரமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஓசூர் : ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோயில் அருகே உள்ள சிறுவர் பூங்காவை மேம்படுத்தி சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஓசூர் தேர்பேட்டை பகுதியில் மலை மீது, 1,500 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற சந்திரசூடேஸ்வரர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தமிழகம், கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஓய்வெடுக்கவும், சிறுவர்கள் விளையாடவும் மாநகராட்சி சார்பில், கோயில் அருகே சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டிருந்தது. இப்பூங்காவிலிருந்து ஓசூர் நகரப்பகுதி மற்றும் கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி வரை, முழு அழகையும் கண்டு ரசிக்க கண்காணிப்பு கோபுரமும், பைனாகுலரும் அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், போதிய பராமரிப்பின்றி பூங்கா உள்ளது. பயணிகள் ஓய்வெடுக்க இருக்கை வசதிகள் இல்லை. சிறுவர்கள் விளையாடும் ஊஞ்சல், சறுக்கு உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் சேதமடைந்து காணப்படுகின்றன.

மலை மீது இருந்த தடுப்புச் சுவர்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. பைனாகுலர் அறை மூடப்பட்டுள்ளதால், இங்கு வரும் இளைஞர்கள் பலர், ஆபத்தை உணராமல் மலை மீது ஏறி நின்று நகரின் இயற்கை அழகை ரசிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அப்போது, லேசாக கால் தவறினாலும் கிடுகிடு பள்ளத்தில் விழும் அபாயம் உள்ளது. பூங்காவுக்கு குழந்தைகளுடன் மிகுந்த எதிர்பார்ப்புடன் வரும் பக்தர்கள், விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்து காணப்படுவதை கண்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘ஓசூர் முதல் அத்திப்பள்ளி வரை உள்ள ஏராளமான தொழிற்சாலைகளில், வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்கி பணி புரிகின்றனர். அவர்கள் விடுமுறை நாட்களில் குழந்தைகளுடன் பொழுதைக் கழிக்க, சந்திரசூடேஸ்வரர் கோயில் மற்றும் சிறுவர் பூங்காவுக்கு வந்து செல்வது வழக்கம்.

ஆனால், முறையான பராமரிப்பு இல்லாததால், பூங்கா பாழடைந்துள்ளது. எனவே, பூங்காவை சீரமைத்து, முறையாகப் பராமரிக்க வேண்டும். மேலும், பூங்காவை கூடுதலாக பொழுதுபோக்கு வசதிகளுடன் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.