மும்பை: பழம்பெரும் இந்தி நடிகர் தர்மேந்திரா (89), சமீபத்தில் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியூ) சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சைக்குப் பிறகு உடல்நலம் தேறிய அவர், கடந்த 12ம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். தற்போது அவர் வீட்டில் ஓய்வெடுத்து வரும் நிலையில், அவர் மருத்துவமனையில் இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தர்மேந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, அவரது குடும்பத்தினர் அவரை சூழ்ந்து நின்று கண்ணீருடன் இருந்த உணர்ச்சிப்பூர்வமான தருணங்களை மருத்துவமனை ஊழியர் ஒருவர் தனது செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவில் தர்மேந்திரா படுக்கையில் இருக்க, அவரது மகன்கள் சன்னி தியோல், பாபி தியோல், முதல் மனைவி பிரகாஷ் கவுர் மற்றும் பேரன்கள் உடனிருந்தனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், வீடியோவை எடுத்த ஊழியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
