தி முக தலைவர் மு.க.ஸ்டாலின் ‘திராவிட மாடல்’ ஆட்சியில் சமூக நீதி, சமத்துவம், மகளிர் மேம்பாடு மற்றும் கல்வி ஆகியவற்றை மையமாகக் கொண்டு மகளிர் உரிமை திட்டம், புதுமை பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், காலை உணவு திட்டம், விடியல் பயணம், நான் முதல்வன் திட்டம் உள்பட பல முக்கிய நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டங்கள் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கமாக இருந்தது. தற்போதைய தவெக ஆட்சியில் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் இல்லை. கஷ்டப்பட்டு உழைக்காமல், ரீல்ஸ் மற்றும் விளம்பரங்கள் மூலம் கவர்ச்சி காட்டும் அரசாக இது செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.
தேர்தல் அறிக்கையில் கூறியபடி, விவசாய கடனை ரத்து செய்ய வேண்டும். குறுவை சாகுபடிக்கு ஒதுக்கீடு செய்த நிதி போதாது என விஜய் ஆட்சிக்கு ஆதரவு தரும் கம்யூனிஸ்ட் கட்சியினர், விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த ஆட்சியில் இழுபறிக்கு இடையே சிங்கப்பெண் திட்டம் மட்டும் தான் செயல்படுத்தப்பட்டுள்ளது. தவெக ஆட்சி அமைந்து 50 நாட்களை கடந்து விட்டது. அரசின் தவறுகளை, இளைஞர்களே தட்டிக்கேட்க துவங்கி விட்டனர். அவர்களை கைது செய்யும் வேலையில் அரசு இறங்கி உள்ளது. மேலும், எதிர்க்கட்சிகளை மிரட்டியும், முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகளும் போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிமுகவின் 6வது எம்.எல்.ஏ.வாக நேற்று பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
அதிமுக கட்சியில் இருந்து பணம், பதவி அல்லது சலுகைகள் ஆசைக்காட்டி தங்கள் பக்கம் இழுக்கும் சட்டவிரோத மற்றும் நெறிமுறையற்ற குதிரை பேர அரசியல் நடவடிக்கை தான் நடக்கிறது. இந்திய தேர்தல் ஆணையம், ஒரு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அதிகபட்சமாக ரூ.40 லட்சம் வரை செலவிட அனுமதிக்கிறது. ஆணையத்தின் செலவு வரம்பு ஒருபுறம் இருந்தாலும், அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் செய்யும் உண்மையான செலவினங்கள் ரூ.15 கோடிக்கு மேல் இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த தொகுதிகளில் மீண்டும் ஒரு இடைத்தேர்தல் மக்களிடம் திணிக்கப்படுகிறது. எம்எல்ஏக்கள் ராஜினாமா என்பது இத்துடன் நின்றுவிடாது. மேலும் சிலர், எம்எல்ஏ பதவியை அடுத்தடுத்து ராஜினாமா செய்வார்கள் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இது ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் எந்த அளவுக்கு தீவிரம் ஆகியுள்ளது என்பதையே காட்டுகிறது.
ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கட்சிகளின் மீது நம்பிக்கையின்றி, எம்எல்ஏக்கள் பர்ச்சேஸை தொடருவது, மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம். சொத்து குவிப்பு வழக்கில் சிக்கியவரை தன் கட்சியில் சேர்க்க முயல்வது ஏன்? சோபா மாடல் அரசின் இந்த வாஷிங் மெஷின் அரசியலை தமிழ்நாடு பார்த்து கொண்டுதான் இருக்கிறது. திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் மூலம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
குதிரை பேரத்தை கம்யூனிஸ்ட்கள் ஏற்பதில்லை. ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு தாவுவது, விலை பேசுவது எங்களுக்கு உடன்பாடில்லை என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் கூறி உள்ளார். சோபா மாடல் அரசு, குதிரை பேர அரசியலை விட்டுவிட்டு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த தீவிரம் காட்ட வேண்டும் என்பது தான் நடுநிலையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


