ஹாங்காங் பேட்மிண்டன் இந்தியா வீரர்கள் அசத்தல்: ஷென், ஆயுஷ், கிரன் ஜார்ஜ் சாத்விக்-சிராக் காலிறுதிக்கு தகுதி
கவ்லூன்: ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டி, ஹாங்காங்கின் கவ்லூன் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் 2வது சுற்று போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் லஷ்சய ஷென், மற்றொரு வீரர் எச்எஸ் பிரணாய் மோதினர். இதில் முதல் செட்டை 15-21 என்ற கணக்கில் பிரணாய் கைப்பற்றினார். 2வது செட்டை 21-18 என்று ஷென் கைப்பற்றினார். இதனால் வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டில் அனல் பறந்தது. இதில் 21-10 என்ற கணக்கில் ஷென் கைப்பற்றி காலிறுதிக்கு முன்னேறினார். இதேபோல், இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டியும் ஜப்பானின் நரோகாவும் மோதினர்.
இதில் 21-19, 12-21, 21-14 என்ற செட் கணக்கில் ஆயுஷ் ஷெட்டி வென்று காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில், இந்தியாவின் கிரன் ஜார்ஜூம், தைவானை சேர்ந்த டி.சி.செளவும் மோதினர். இதில் 21-6, 21-12 என்ற நேர் செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி, தாய்லாந்தின் சுக்புன், தீரரட்சகுல் ஜோடியை எதிர்கொண்டது. இதில், 18-21, 21-15, 21-11 என்ற செட் கணக்கில் வென்று இந்திய ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.


