Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தேனியும் குக்கரும் போட்டிருக்கும் மெகா திட்டம் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘டாஸ்மாக் விற்பனை சரிந்தாலும் மேலாளரும், விற்பனையாளரும் மட்டும் வளம் கொழித்து வருகிறார்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘தெற்கே அருவிகள் கொட்டுகிற மாவட்டத்தில் டாஸ்மாக்கில் சமீபகாலமாக சரக்கு விற்பனை படிப்படியாக சரிந்து வருதாம்.. தனியார் அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிற ஒரு மாவட்டத்தில், சரக்கு விற்பனையிலும் பணம் கொட்ட வேண்டுமே என அதிகாரிகள் ஆலாய் பறக்கிறாங்களாம்.. ஆனா விற்பனை சரிவுக்கு டாஸ்மாக்கில் உள்ளவர்களே காரணமாக இருப்பதை இப்ப கண்டுபிடிச்சிருக்காங்க.. நல்ல வருமானம் கொட்டும் மதுக்கடைகளின் அருகே மனமகிழ் மன்றங்களுக்கு அனுமதி கொடுத்து, அவற்றை ஊக்குவித்து ஒரு மேலாளரும், மணியான ஒரு விற்பனையாளரும் வளம் ெகாழித்து வருகின்றனராம்.. இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் தரப்பு கலால் அதிகாரிகளிடம் புகாரளித்தும், வருமானம் எப்படி வந்தால் என்ன என்கிற போக்கில் அவர்களும் கண்டுகொள்ளவில்லையாம்.. மாவட்டத்தின் ஒரு பகுதியில் ஆயிரம் ‘குடி’ கொண்ட ஒரு நகரில் பினாமிகள் பெயரில் டாஸ்மாக்கில் இருக்கும் ஊழியர்களே மனமகிழ் மன்றம் நடத்துகிறார்களாம்.. இதனால் அங்க இருக்கிற கடையில எல்லாம் வியாபாரம் ஊத்தி மூடிக்கிச்சாம்.. ஒரு பக்கம் புத்தாண்டு, பொங்கல்னு டாஸ்மாக் சார்பில் இலக்கு நிர்ணயம். மறுபக்கம் மனமகிழ் மன்றங்களால் இயல்பான வியாபாரத்தையே நடத்த முடியாமல் டாஸ்மாக் ஊழியர்கள் தவியா தவிக்கிறாங்களாம்.. இப்ப விஷயத்த அருவி மாவட்டத்து கலெக்டர் காதுல கொண்டு போய் ஓதியிருக்காங்க.. நல்லது நடந்தால் சரி என்கிறது டாஸ்மாக் தரப்பு..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலை கட்சியில் தங்களை சேர்க்காமல் உதறிய சேலம்காரருக்கு வருகிற தேர்தலில் பாடம் புகட்ட தேனிக்காரரும், குக்கரும் ‘மெகா’ திட்டம் போட்டிருக்கிறார்களாமே.’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘இலை கட்சியில் இருந்து தங்களை தூக்கி வீசி செல்லாக் காசாக்கி விடலாம் என்ற சேலம்காரரின் முகத்தில் இந்த தேர்தலில் தேனிக்காரரும், குக்கரும் சேர்ந்து கரியைபூசப் போகிறார்களாம்.. அதாவது, தங்களை இலை கட்சியில் இருந்து நீக்கியதுடன் டெல்லி தலைமை வலியுறுத்தியும் கூட்டணியில் சேர்க்காமல் சேலம்காரர் முட்டுக்கட்டை போடுகிறார். இனியும் வலியப் போய் அந்த கூட்டணியில் மானத்தை அடகு வைத்து சேர முடியாது.. ஏற்கனவே கோபிக்காரர் வெளியேறி நடிகர் கட்சியில் ஐக்கியமாகி விட்டார். அதேபோல தேனிக்காரரும், குக்கர்காரரும் நடிகர் கட்சியில் கூட்டணியில் சேர முடிவு செய்துள்ளார்களாம்.. இதன் மூலம் தங்களுக்கு வெற்றி கிடைக்கிறதோ, இல்லையோ, இலை கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறக் கூடாது என்பதுதான் அவர்களின் சூத்திரமாம்.. தங்களுக்கு சாதகமான ஓட்டுகளை பிரிப்பதன் மூலம் இலை கட்சியின் கூட்டணியில் ஓட்டை விழுந்து விடும். கடந்த மக்களவை தேர்தலைப் போல முடிவுகள் மாறி விடும். அப்போது சேலம்காரரை எளிதாக வீழ்த்தி விடலாம். அதுமட்டுமல்லாது, இலை கட்சியில் ஒவ்வொருவராக உருவி சேலம் காரரை வீழ்த்தி விடலாம் என்பதுதான் இருவரின் ‘மெகா’ பிளானாம். அதற்கு இந்த சட்டமன்ற தேர்தலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளப் போகிறார்களாம்.. அதனால் தான் டெல்லி தலைமையை விட்டு விலகுவதாக பகிரங்கமாக அறிவித்தனராம்.. இப்படித் தான் அல்வா, முத்து மாவட்டங்கள் உள்பட தென் மாவட்டங்கள் முழுவதும் குக்கர்காரர், தேனிக் காரரின் ஆதரவாளர்கள் பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலைக்கட்சியில் மாஜி அமைச்சர் மாவட்டத்தில் நடக்கும் கூத்தால் சேலத்துக்காரர் கோபத்தில் இருக்காராமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘இலைக் கட்சியில் தேர்தல் பணியை கூட கவனிக்க மாவட்ட பொறுப்பாளர் இல்லாமல் கட்சியினர் திண்டாடி வருகிறார்களாம்.. இலை கட்சியில் மாவட்டந்தோறும் 2, 3 தொகுதிக்கு ஒரு மாவட்ட பொறுப்பாளர் என்று நியமித்து உள்ள நிலையில் புரம் என்று முடியும் மாவட்டம் மட்டும் அதற்கு விதிவிலக்காக இருக்கிறதாம்.. மாஜி அமைச்சர், தன் செல்வாக்கால் ஒருங்கிணைந்த மாவட்டத்தை தன் கண்ட்ரோலில் எடுத்திருக்கிறாராம்.. 6 தொகுதியை உள்ளடக்கி, தான் இருக்கும் வரை மாவட்ட பொறுப்பாளராக இருப்பேன் என்று கர்ஜித்தும் வருகிறாராம்.. சேலத்துக்காரர் புதிய மாவட்ட பொறுப்பாளர்களாக 2, 3 பேரை பிரித்து போடுவதற்கு முயற்சி எடுத்தாராம்.. ஆனால் மாஜி அமைச்சர் போட்ட முட்டுக்கட்டையை மீறி அவர் எடுக்கும் முயற்சி வெற்றி பெறவில்லையாம்.. தற்போது ராஜ்யசபா எம்பியாக இருப்பதால் டெல்லியிலேயே முகாமிட்டிருக்கும் மாஜி அமைச்சரும் இந்த மாவட்டத்து பக்கம் எட்டிப் பார்ப்பது கிடையாதாம்.. கட்சி அலுவலகமும் பூட்டியே கிடக்கிறதாம்.. தற்போது நடந்த எஸ்ஐஆர் பணிகளில் கூட கவனம் எடுக்கவில்லையாம்.. கட்சியினர் பணிகள் குறித்து கேட்கவில்லை என்ற தகவல் சேலத்துக்காரர் காதுக்கு போயிருக்கிறதாம்.. இதனால் கடுப்பாகி மாஜி அமைச்சரை தாண்டி இரண்டாம் கட்ட தலைவர்களை அழைத்துப் பேசி புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்க இருக்கிறாராம்.. விரைவில் புரம் என்று முடியும் மாவட்டத்தில் ஆளுங்கட்சிக்கு நிகராக 2, 3 மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்தால்தான் அரசியல் செய்ய முடியும். இல்லையென்றால் இங்கு கட்சி தலை தூக்குவது கடினம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் சேலத்துக்காரர். இந்த முடிவை மாஜி அமைச்சரின் அதிருப்தியாளர்கள் நேரடியாக சேலத்துக்காரரை சந்தித்து முறையிட்டதால் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘முக்கிய நிர்வாகிக்கு இலை கட்சி தலைமை டோஸ் விட்டது யாருக்காம்..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘கொசுவலை மாவட்டத்தில் உள்ள இலை கட்சியின் முக்கிய நிர்வாகி தலைநகர் சென்று வந்தாராம்.. அங்கு சென்றுவந்த பிறகு அவரது நடவடிக்கையில் மாற்றம் தெரிந்துள்ளதாம்.. தொடர்ந்து, கோயில் கோயிலாக சென்று தரிசனம் செய்து வருகிறாராம்... கட்சி பணியில் எதிர்பார்த்த அளவு வேலை செய்யவில்லை என தலைமைக்கு புகார் சென்றுள்ளதாம்.. இதை பார்த்து தலைமை அவரை கடிந்து கொண்டதாம்.. கொசுவலை மாவட்டத்தில் என்ன நடக்கிறது என்பது எங்களுக்கு தெரியும் என ஒவ்வொரு விஷயங்களை அடுக்கி கூறினார்களாம்... இதை கேட்டு, அந்த முக்கிய நிர்வாகி அதிர்ச்சி அடைந்தாராம்... இந்த தகவல் எப்படி தலைமைக்கு சென்றது என அவர் விசாரித்து வருகிறாராம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.