பொழுதுபோக்கான தொழிலாக இருக்கும். அதேசமயம் நல்ல லாபம் பார்க்கலாம். சுற்றுச்சூழலுக்கு நன்மை விளைவிப்பதாகவும் இருக்கும் என்று சொல்லக்கூடிய தொழில்கள் மிகவும் சொற்பமே. அவற்றில் ஒன்றுதான் தேனீ வளர்ப்பு. மேற்சொன்ன காரணங்களால் கல்லூரி மாணவர்கள், இல்லத்தரசிகள் என பலதரப்பினரும் இன்று தேனீ வளர்ப்பில் ஈடுபடுகிறார்கள். அந்த வரிசையில் தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்குடிகாடு அருகில் உள்ள வேங்கராயன்குடிகாட்டைச் சேர்ந்த பி.எஸ்.சி. பட்டதாரியான மாதவன் தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். மஞ்சள் கொத்துகளும், கீரைச்செடிகளும் நிரம்பிய தமது தோட்டத்தில் தேனீ பெட்டிகளை வைத்து தேன் சேகரிப்பில் ஈடுபட்டு வரும் மாதவனை ஒரு காலைப்பொழுதில் சந்தித்தோம். ``எங்கள் குடும்பம் பூர்வீக விவசாயக் குடும்பம்தான். பாகற்காய், புடலங்காய், பீர்க்கன்காய் உள்ளிட்ட காய்கறிகளை தொடர்ச்சியாக பயிரிடுகிறோம். சீசன் சமயங்களில் வெள்ளரி பயிரிடுவோம். மகசூலாக கிடைக்கும் காய்களை தஞ்சாவூர் அண்ணா நகரில் உள்ள உழவர் சந்தைக்கு எடுத்து சென்று விற்பனை செய்வோம்.
இதற்கிடையே விவசாயம் சார்ந்து வேறு ஏதாவது தொழில் செய்யலாமே என யோசித்தபோது, தேனீ வளர்ப்பு குறித்து சில நண்பர்கள் தெரிவித்தார்கள். நிலத்தில் தேன் பெட்டிகளை வைத்து தேன் சேகரிப்பில் ஈடுபடும்போது மகசூலானது 40 சதவீதம் வரை அதிகரிக்கும் என்றும் கூறினார்கள். இத்தகைய தேனீ வளர்ப்பில் நாமும் ஈடுபடலாமே என நினைத்தேன்.இந்த சூழலில் தஞ்சையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த தேனீ வளர்ப்பு பயிற்சியில் கலந்துகொண்டேன். பின்னர் திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் உள்ள மலையடிப்புதூரில் மூன்று நாட்கள் தங்கியிருந்து தேனீக்கள் வளர்ப்பு பற்றி முழுமையாக தெரிந்துகொண்டேன். தேனீக்களை எவ்வாறு பராமரிக்க வேண்டும், தேன் பெட்டிகளை எவ்வாறு பராமரிக்க வேண்டும், அவற்றை எப்படி சுத்தம் செய்வது என்பது போன்ற பல விசயங்களை அங்கு தெரிந்து கொண்டேன். தேனீக்களில் இந்தியத் தேனீ, இத்தாலியன் தேனீ, கொடுக்கில்லாத தேனீ, கொம்பு தேனீ, மலைத்தேனீ என 5 வகை உள்ளன. இவற்றில் மனிதர்களால் வளர்க்கக்கூடியவை இந்தியத் தேனீ, இத்தாலியத் தேனீ மற்றும் கொடுக்கில்லாத தேனீ ஆகியவை. ஆனால் கொடுக்கில்லாத தேனீக்களிடம் இருந்து மிகவும் குறைவான தேன் மட்டுமே பெற இயலும் என்பதால் இந்தியத் தேனீக்கள்தான் அனைவரின் தேர்வாக உள்ளது.
ஒரு தேனீ குடும்பத்தில் ஒரு ராணி தேனீ, சில நூறு ஆண் தேனீக்கள் மற்றும் பல்லாயிரம் வேலைக்கார பெண் தேனீக்கள் இருக்கும். ராணி தேனீக்களுக்கு முட்டையிடுவது மட்டும்தான் வேலை. நாள் ஒன்றுக்கு 150ல் இருந்து 250 வரை முட்டையிடும். ஆண் தேனீக்களுக்கு ராணி தேனீயுடன் இனச்சேர்க்கை செய்து, தேன்கூட்டை பாதுகாக்கும் பொறுப்பு. மற்ற அனைத்து வேலைகளையும் வேலைக்கார தேனீக்கள் செய்யும். இதுபோன்ற பல தகவல்களை பயிற்சியின்போது தெரிந்துகொண்டேன். பயிற்சி பெற்ற இடத்திலேயே தேனீக்களை வளர்க்க 10 பெட்டிகளை ரூ.25 ஆயிரத்திற்கு வாங்கி வந்தேன். பெட்டி இருபாகங்களாக இருக்கும். கீழ் பாகத்தில் தேனீக்களுக்கான கூடும், மேற்புறத்தில் நான்கு சட்டங்களில் தேன் எடுப்பதற்கான கூடுகளும் இருக்கிறது. தற்போது 2 மாதங்களில் அனைத்து தேன் பெட்டிகளிலும் தேனீக்கள் தாங்கள் வசிக்கும் கூட்டை கட்டி முடித்து விட்டன. மேற்புறத்தில் உள்ள தேன் எடுக்கும் சட்டங்களில் தற்போது கூடு கட்ட ஆரம்பித்து விட்டன. இனி அனைத்து பெட்டிகளிலும் தேன் எடுப்பதற்கான கூடுகள் கட்ட ஆரம்பித்துவிடும். இந்த தேன் கூடுகளை முறையாக சுத்தம் செய்ய வேண்டும்.
எங்கள் தோட்டத்தில் பெட்டிகளை வைத்துள்ளதால் தோட்டத்தில் மகரந்தச் சேர்க்கை உடனடியாக ஏற்படுகிறது. இரண்டு மாதத்தில் தேனடை கட்டி முடித்துவிடும். மாதம் ஒருமுறை தேன் அறுவடை செய்யலாம். ஏறத்தாழ ஒவ்வொரு பெட்டியிலும் ஒரு கிலோ தேன் அறுவடை செய்யலாம். இப்போது 8 பெட்டிகள் வைத்திருக்கிறேன். அதனால் மாதத்திற்கு 8 கிலோ தேன் நிச்சயம் உற்பத்தி செய்து அறுவடை செய்யலாம். சுத்தமான தேன் என்பதால் விற்பனை வாய்ப்பும் அதிகம் உள்ளது. இப்போது தேன் பெட்டிகள் வைத்து வளர்ப்பதே எங்களின் காய்கறி தோட்டத்தில் இன்னும் தேனீ பெட்டிகள் வைத்து விவசாயத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான். தேன் பெட்டிகள் வைத்துள்ளதை சமூக வலைதளத்தில் பதிவிட்டேன். இப்போதே ஆர்டர்கள் வந்துள்ளன. இன்னும் 2 மாதத்தில் முதல் தேன் அறுவடையை செய்து விடுவேன். இதனால் மாதத்திற்கு ரூ.5 ஆயிரம் கிடைக்கும். இப்போது சோதனை முறையில் வைத்தேன். தேனீக்கள் நன்றாக கூடுகள் கட்டி வருவதால் மிகுந்த நம்பிக்கை பிறந்திருக்கிறது. தேனீ பெட்டிகள் எண்ணிக்கையை அதிகரித்தால் மாதந்தோறும் ரூ.20 ஆயிரத்திற்கு மேல் வருமானம் ஈட்ட முடியும். அதனுடன் எங்கள் காய்கறித் தோட்டத்தில் காய்கறிகள் விளைச்சலையும் அதிகரிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது’’ என பூரிப்புடன் பேசினார்.
தொடர்புக்கு:
மாதவன்: 63829 91084.


