முதல் மனைவியை விவாகரத்து செய்த பின் ஸ்பானிஷ் நடிகையை கரம்பிடித்த ஹாலிவுட் நடிகர்: ரகசிய திருமணம் செய்ததால் பரபரப்பு
லாஸ் ஏஞ்சல்ஸ்: கிரேய்ஸ் அனாடமி சீரியல் நடிகர் ஜெஸ்ஸி வில்லியம்ஸ் தனது காதலியான ஸ்பானிஷ் நடிகை அலெஜான்ட்ரா ஒனிவாவை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். பிரபல ஹாலிவுட் தொடரான ‘கிரேய்ஸ் அனாடமி’ மூலம் புகழ்பெற்றவர் நடிகர் ஜெஸ்ஸி வில்லியம்ஸ் (44). இவர் கடந்த 2017ம் ஆண்டு தனது முதல் மனைவி அரின் டிரேக்-லீயை பிரிவதாக அறிவித்தார். இவர்களின் விவாகரத்து வழக்கு கடந்த 2020ம் ஆண்டு வரை சுமார் 3 ஆண்டுகள் நீடித்தது. இந்த விவாகரத்து விவகாரத்தில் தம்பதியிடையே 2 குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் ஜீவனாம்சம் தொடர்பாக பெரும் சட்டப் போராட்டமே நடந்தது.
ஒரு கட்டத்தில் நீதிமன்றம் இவர்களை உயர் மோதல் பெற்றோர் திட்டத்தில் பங்கேற்கவும் உத்தரவிட்டது. இந்த கசப்பான சம்பவங்களுக்கு பிறகு, கடந்த 2025ம் ஆண்டு இத்தாலியில் நடந்த ஒரு படப்பிடிப்பின் போது ஸ்பானிஷ் நடிகை அலெஜான்ட்ரா ஒனிவா (33) என்பவருடன் ஜெஸ்ஸி வில்லியம்ஸுக்கு காதல் மலர்ந்தது. கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்த இந்த ஜோடி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு யாருக்கும் தெரியாமல் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக கடந்த 4ம் தேதி அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகின.
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தனது முதல் மனைவியிடமிருந்து சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்ற ஜெஸ்ஸி வில்லியம்ஸ், தற்போது தனது புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார். இவர்களின் திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடந்த நிலையில், சமூக வலைதளங்களில் எவ்வித புகைப்படங்களையும் இவர்கள் பகிரவில்லை. இருப்பினும், இந்த ஜோடி மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதாக அவர்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



