Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

விடுமுறை நாளில் பக்தர்கள் அலைமோதல் அண்ணாமலையார் கோயிலில் 4 மணிநேரம் காத்திருந்து தரிசனம்

*நாளை பவுர்ணமி கிரிவலம்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வார இறுதிவிடுமுறை தினமான நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதனால், சுமார் 4 மணிநேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

நினைத்தாலே முக்தித்தரும் திருத்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு, சமீப காலமாக பக்தர்கள் வருகை வெகுவாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, பவுர்ணமி நாட்களுக்கு இணையாக அரசு விடுமுறை நாட்களிலும், வார இறுதி நாட்களிலும் பக்தர்கள் தரிசனத்துக்காக குவிகின்றனர்.

அதன்படி, கோடை விடுமுறை முடிந்துவிட்ட நிலையிலும், வார இறுதி விடுமுறை தினமான நேற்று அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் நேற்று அலைமோதியது. இதையொட்டி, அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கும் போதே தரிசன வரிசையில் கூட்டம் காத்திருந்தது.

பின்னர், படிப்படியாக பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. நேற்று வெயில் தாக்கம் அதிகரித்திருந்தது. பின்னர், மாலை வெயில் தாக்கம் தணிந்து மழை மேகம் சூழ்ந்து காணப்பட்டது.

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கோயில் வெளிபிரகாத்தில், வட ஒத்தைவாடை தெரு வரை தரிசன வரிசை நீண்டது. அதேபோல், பொது தரிசன வரிசை அனுமதிக்கப்பட்ட ராஜகோபுரம் வழியாகவும் கூட்டம் அலைமோதியது.

சுமார் 4 மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, வரிசையில் காத்திருந்த முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் தவித்தனர். மேலும், வழக்கத்தைவிட நேற்று இரவு கிரிவல பக்தர்கள் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்திருந்தது.

ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். இடுக்குப் பிள்ளையார் கோயிலிலும், அஷ்ட லிங்க சன்னதிகளிலும் தரிசனத்துக்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.இந்நிலையில், வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நாளை பகல் 12.32 மணிக்கு தொடங்கி, நாளை மறுதினம் பகல் 1.58 மணிக்கு நிறைவடைகிறது.

எனவே, நாளை இரவு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி, பக்தர்கள் தரிசனத்துக்காக கோயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.