Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வரலாறு காணாத அளவுக்கு வாக்குப்பதிவு பீகாரில் நாளை ஓட்டு எண்ணிக்கை: புதிய ஆட்சி அமைப்பது யார்?

பாட்னா; வரலாறு காணாத வாக்குப்பதிவாகி உள்ள பீகார் மாநிலத்தில் நாளை ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. பகல் 12 மணி அளவில்புதிய ஆட்சி அமைப்பது யார் என்பது தெரிந்து விடும். 243 தொகுதிகள் கொண்ட பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடக்கிறது. அங்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், பாஜ தலா 101 தொகுதிகள், லோக் ஜன சக்தி - ராம் விலாஸ் - 29, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா 6, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 6 தொகுதிகளில் போட்டியிட்டன.

இந்தியா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் 143, காங்கிரஸ் 61, இந்திய கம்யூனிஸ்ட் - எம்எல் 20, விஐபி 15, இந்திய கம்யூனிஸ்ட் 9, மார்க்சிஸ்ட் 4 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தின. தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன.  பீகார் சட்டப்பேரவைக்கு நடந்த இரண்டு கட்ட தேர்தலிலும் வரலாறு காணாத அளவுக்கு வாக்குப்பதிவாகி உள்ளது.

121 தொகுதிகளுக்கு நடந்த முதற்கட்ட தேர்தலில் 65 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், நேற்று முன்தினம் 122 தொகுதிகளுக்கு நடந்த இரண்டாம் கட்டதேர்தலும் 68.8 சதவீத வாக்குகள் பதிவாகி இரண்டு கட்டத்திலும் சேர்த்து மொத்தம் 66.9 சதவீத வாக்குகள் பதிவாகி வரலாற்று சாதனை படைத்தது. பீகார் தேர்தல் வரலாற்றில் இதுபோன்ற வாக்குப்பதிவு இதுவரை நடந்தது இல்லை. இந்தத் தேர்தலில் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

62.8% ஆண் வாக்காளர்கள் வாக்களித்த நிலையில், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 71.6% ஆகப் பதிவாகி சாதனை படைத்துள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் என்று கூறப்பட்டுள்ளதால் அரசியல் பரபரப்பு அதிகரித்துள்ளது. நாளை காலை 8 மணிக்கு பீகார் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். முதலில் தபால் ஓட்டுகளும், அதை தொடர்ந்து மின்னணு எந்திர வாக்குகளும் எண்ணப்பட உள்ளன. நாளை பகல் 12 மணிக்கு பீகார் மாநிலத்தில் புதிய ஆட்சி அமைப்பது யார் என்பது தெரிந்து விடும்.

* 501 கிலோ லட்டுகளை ஆர்டர் செய்த பா.ஜ

பீகார் தேர்தலில் வெற்றியை எதிர்பார்த்து வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்னதாக 501 கிலோ லட்டுகளை பா.ஜ ஆர்டர் செய்துள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளால் உற்சாகமடைந்துள்ள பா.ஜ நவம்பர் 14 ஆம் தேதி காலை பாட்னாவில் தொண்டர்களுக்கு வழங்க வசதியாக லட்டு ஆர்டர் செய்துள்ளது.

* பா.ஜ கூட்டணி வெற்றியா? சான்சே இல்லை: தேஜஸ்வி யாதவ் கணிப்பு

பீகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறுகையில்,’ பீகாரில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. இந்த கணிப்புகள் எல்லாம் பா.ஜவின் உயர்மட்டத் தலைமையின் வழிகாட்டுதலின் பேரில் செய்யப்பட்டுள்ளன. இந்தியா கூட்டணி அமோக பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைக்கப் போகிறது. பீகார் தேர்தலில் வாக்காளர்களின் அதிக வாக்குப்பதிவு, மக்கள் அரசாங்கத்தில் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதைக் குறிக்கிறது. நவம்பர் 18 அன்று நாங்கள் பதவி ஏற்போம்.

பீகாரில் ஆளும் அரசாங்கத்தை மாற்ற சுமார் 76 லட்சம் கூடுதல் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். இந்த கூடுதல் வாக்குகள் மாற்றத்திற்கானவை. மெதுவாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்ற அச்சம் எனக்கு உள்ளது. இருப்பினும் நாங்கள் 160க்கும் மேற்பட்ட இடங்களைப் பெறப் போகிறோம். 2024 மக்களவைத் தேர்தலில், இந்த கருத்துக்கணிப்புகள் ேதசியஜனநாயக கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களை வெல்லும் என்று கூறின. தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் பா.ஜ எங்கு சென்றது என்பதை அனைவரும் பார்த்தார்கள் ’ என்றார்.

* இந்தியா கூட்டணிக்கு தான் வெற்றி: காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியின் ஊடக மற்றும் விளம்பரத் தலைவர் பவன் கேரா கூறுகையில், ‘இந்தியா கூட்டணி தான் பீகார் தேர்தலில் வெற்றி பெறும். அதிக வாக்குப்பதிவு மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்ததற்கான சான்றாகும். தேர்தல்களின் போது நான் பீகாரில் நீண்ட காலமாக இருக்கிறேன். மக்களின் நாடித்துடிப்பை உணர்ந்தேன். அவர்கள் ஒரு மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர். அதிக வாக்குப்பதிவு வேலையின்மை மற்றும் ஊழலுக்கு எதிரான அவர்களின் கோபத்தின் வெளிப்பாடாகும். அதற்காக அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியை தண்டிக்க விரும்பினர். நாங்கள் வெற்றி பெற்று அடுத்த அரசாங்கத்தை அமைக்கப் போகிறோம்’ என்றார்.

* பெண்கள் எங்களுக்குத்தான் வாக்களித்தனர்: பா.ஜ

பா.ஜ செய்தித்தொடர்பாளர் ராஜீவ்பிரதாப் ரூடி கூறுகையில், ‘பீகார் தேர்தலில் பெண் வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களித்தது ஒரு வரலாற்று மாற்றம். வளர்ச்சி மற்றும் நல்லாட்சிக்காக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அவர்கள் வாக்களித்தனர். பிரதமர் மோடியின் கீழ் 2014 முதல் நடந்து வரும் நல்லாட்சிக்கான ஆதரவு இந்திய ஜனநாயகத்தில் ஒரு புதிய பழக்கமாக மாறியுள்ளது, இது இதற்கு முன் காணப்படாத ஒரு போக்காகும்’ என்றார்.