சரித்திர புத்தகத்தில் புதிய அத்தியாயம் இந்தியாவிலேயே வறுமை இல்லாத முதல் மாநிலம் கேரளா: முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு
திருவனந்தபுரம்: கேரளாவை இந்தியாவில் வறுமை இல்லாத முதல் மாநிலமாக முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார். இந்தியாவிலேயே முதன்முதலாக கேரளா வறுமை இல்லாத மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் பினராயி விஜயன் இதை அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதற்காக சிறப்பு சட்டசபை கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பிரிவு 300ன் படி முதல்வர் பினராயி விஜயன் இந்தியாவிலேயே முதன் முதலாக கேரளா வறுமை இல்லாத மாநிலமாக மாறி உள்ளதாக அறிவித்தார்.
ஆனால் இது வெறும் ஏமாற்று வேலை என்றும், தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் மக்களை ஏமாற்றுவதற்கான நாடகம் என்று கூறி சட்டசபை கூட்டத்தை காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் மம்மூட்டி, சபாநாயகர் ஷம்சீர் மற்றும் கேரள அமைச்சர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில் முதல்வர் பினராயி விஜயன் பேசியது: கடந்த 2021ல் இடதுசாரி கூட்டணி அரசு மீண்டும் பொறுப்பேற்றபோது கேரளாவில் தீவிர வறுமை ஒழிப்புத் திட்டத்தை நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது. இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக கேரளாவை தீவிர வறுமை இல்லாத மாநிலமாக மாற்றுவதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். உலக வங்கியின் வரையறையின்படி தீவிர வறுமை என்பது ஒரு நபர் ஒரு நாளைக்கு ரூ.180க்கும் குறைவான வருமானத்தில் வாழ்வதாகும்.
கடந்த 2021ல் இந்த திட்டத்தை கொண்டு வந்த போது கேரளாவில் 64,006 குடும்பத்தினர் தீவிர வறுமை பட்டியலில் இருந்தனர். தற்போது கேரளா வறுமை இல்லாத மாநிலமாக மாறியுள்ளது. குழந்தை இறப்பு மற்றும் பிரசவ இறப்பில் அமெரிக்காவை விட கேரளா முன்னணியில் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
* 8 மாதங்களுக்குப் பின் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மம்மூட்டி
நடிகர் மம்மூட்டி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு மேலாக எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் சுமார் 8 மாதங்களுக்குப் பின் முதன்முதலாக நடிகர் மம்மூட்டி கேரளாவை வறுமை இல்லாத மாநிலமாக அறிவிக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நடிகர்கள் கமல், மோகன்லால் கலந்து கொள்ளவில்லை.