Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

வரலாற்று சாதனை

இந்தியாவின் 2024-25ம் நிதியாண்டில், ஜவுளி ஏற்றுமதியில் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களை முந்தி, தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. நாட்டின் மொத்த ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு 26.81 % பங்களிப்புடன், 7.99 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஜவுளிப்பொருட்களை ஏற்றுமதி செய்து முதலிடம் வகிக்கிறது. 2020-21ம் நிதியாண்டில் 6,193.39 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்த தமிழ்நாட்டின் ஜவுளி ஏற்றுமதி, 2024-25ம் நிதியாண்டில் 7,997.17 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்து, 29 % வளர்ச்சியை எட்டியுள்ளது. குஜராத் 5.65 பில்லியன் டாலர் ஏற்றுமதியுடன் இரண்டாம் இடத்திலும், மகாராஷ்டிரா மூன்றாம் இடத்திலும் உள்ளன. முந்தைய நிதியாண்டில் 20.78% ஆக இருந்த தமிழ்நாட்டின் பங்களிப்பு, இந்த நிதியாண்டு 26.81% ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாடு அரசின் ஊக்குவிப்புடன், கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் போன்ற ஜவுளி மையங்களின் சிறப்பான செயல்பாடு மற்றும் ஏற்றுமதி சார்பு கொள்கைகள் இதற்கு முக்கிய காரணங்கள் ஆகும். முந்தைய நிதியாண்டிலும் (2023-2024) தமிழகம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. தொழில்துறையில் இந்தியாவிற்கே வழிகாட்டியாக திகழும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் சிறப்பான தொழில் கொள்கைகள், ஜவுளித்துறைக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகைகள், தடையற்ற மின்சாரம் மற்றும் கட்டமைப்பு ஆகியவற்றை மேம்படுத்தியதன் நேரடி விளைவாகவே இந்த சாதனை சாத்தியமாகியுள்ளது.

குஜராத்தைவிட தமிழ்நாடு சுமார் 2,351 மில்லியன் டாலர் அளவுக்கு கூடுதலாக ஏற்றுமதி செய்து, இந்தியாவின் ஜவுளி தலைநகரம் தமிழ்நாடு என்பதை ஆணித்தரமாக நிரூபித்துள்ளது. பிற மாநிலங்களின் நிலையை பொறுத்தவரை மத்திய பிரதேசம் (1,324.97 மில்லியன் டாலர்), மேற்குவங்கம் (921.95), ராஜஸ்தான் (855.37) என மற்ற மாநிலங்கள் பல மடங்கு பின்தங்கியுள்ளன. தென்னிந்தியாவில் ஆந்திரா (506.42), கேரளா (434.14), தெலங்கானா (111.09) ஆகிய மாநிலங்களைவிட தமிழ்நாடு மிகப்பெரிய ஜாம்பவானாக திகழ்கிறது. எளிதாக தொழில் தொடங்கும் சூழல், உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ஈர்க்கப்பட்ட பல்லாயிரம் கோடி முதலீடுகள், புதிய மினி ஜவுளி பூங்கா அமைக்கும் திட்டம் போன்ற முதல்வரின் சீரிய முன்னெடுப்புகள் இந்த மாபெரும் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது. கப்பல் மற்றும் விமான போக்குவரத்து மூலம் சர்வதேச அளவில் கொடி கட்டி பறக்கும் தமிழ்நாட்டின் இந்த ஜவுளி ஏற்றுமதி சாதனை, ‘2030-க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்’ என்ற முதல்வரின் இலக்கை நோக்கி தமிழ்நாடு அசுர வேகத்தில் முன்னேறி வருவதற்கான மிகச்சிறந்த சான்றாக அமைந்துள்ளது.

இந்திய அளவில் ஜவுளித்துறை ஏற்றுமதியில் தமிழ்நாடு சிறந்து விளங்க திருப்பூர் மாநகரம் முக்கிய பங்காற்றுகிறது. பருத்தி பின்னலாடை (Cotton Knitwear) ஏற்றுமதியில் தமிழகத்தின் திருப்பூர் மாநகரம் மட்டும் சுமார் 50% பங்களிப்பை வழங்குகிறது. பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வட்டி மானியமும், ஏற்றுமதி ஊக்கத்தொகையும் ஒன்றிய அரசு வழங்க முன்வர வேண்டும். சீனாவில் இருந்து வங்கதேசம் வழியாக இந்தியாவுக்கு அதிகப்படியான ஜவுளிகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதை தடுக்க, அதிகப்படியான இறக்குமதி வரி விதிக்க வேண்டும். இதை ஒன்றிய அரசு முறையாக செய்தால், தமிழ்நாடு இன்னும் சாதிக்கும். ஒட்டுமொத்த இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி அதிகரிக்கும். அந்திய செலாவணி குவியும். நாட்டின் பொருளாதாரம் மேம்படும்.