ராஜபாளையம்: மதுரையை அடுத்த ஒத்தக்கடை சுதந்திர நகரை சேர்ந்தவர் தணிகாசலம் (46). இந்து முன்னணி நிர்வாகி. இவருக்கு சூரியகலா (40) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில், திருநெல்வேலியில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்வில் பங்கேற்றுவிட்டு, விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்துக்கு பஸ்சில் கிளம்பி வந்துள்ளார். நள்ளிரவு 12 மணியளவில் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் இறங்கியுள்ளார்.அப்போது, அங்கு டூவீலரில் வந்த இரு மர்ம நபர்கள், அவரை வழிமறித்துக் கூர்மையான ஆயுதத்தால் குத்திவிட்டு தப்பினர். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் முன்பாக, காவல் கண்காணிப்பு அறை அருகில் அரங்கேறிய இந்தக் கொடூரக்கொலை குறித்துத் தகவல் அறிந்த, விருதுநகர் எஸ்பி கௌதம் கோயல் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். வடக்கு காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிந்து, அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் ராஜபாளையம் மங்காபுரம் பகுதியைச் சேர்ந்த காளிராஜ் (27), நக்கனேரி பகுதியைச் சேர்ந்த முனீஸ்வரன் (28) ஆகியோர் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.



