இந்தி திணிப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்: ஒன்றிய அரசு அலுவலகம் நோக்கி பேரணியும் நடந்தது
இந்த கூட்டத்தில் பிப்ரவரி 25ம் தேதி தாய் மொழி தமிழை காக்க, இந்தி மொழி ஆதிக்கத்தை எதிர்த்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் மாணவர் இயக்கங்கள் சார்பில் நேற்று காலை போராட்டம் நடைபெற்றது. சென்னை சைதாப்பேட்டை கலைஞர் அருகில் உள்ள தபால் நிலையம் மற்றும் கலெக்டர் அலுவலகம் அருகில் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள் ஒன்றிய அரசு அலுவலகங்களை நோக்கி பேரணியிலும் ஈடுபட்டனர். இதேபோல சென்னை தென்மேற்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் மந்தைவெளி ஆர்.கே.மடம் சாலையில், மாணவர் அணி அமைப்பாளர் சரவணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மயிலை மேற்கு பகுதி செயலாளர் நந்தனம் கி.மதி முன்னிலை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர் அணி நிர்வாகிகள் தி.நகர் எஸ்.காளி, சீனிவாசன், லோகேஷ், சுற்றுச் சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் தி.நகர் லயன் சக்திவேல், த.பத்மநாபன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதே போல தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாணவர் அமைப்பை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.