Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஒன்றிய அரசு மருத்துவத்துறையில் இந்தி - சமஸ்கிருதம் திணிப்பை கைவிட வேண்டும்: சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்

சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களிடம் அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் கூறியதாவது: மத்தியில் ஆளக்கூடிய பாஜ அரசு மருத்துவ கல்வியை இந்துத்துவா கொள்கையாக மாற்றி வருகிறது. மத ரீதியான புனித பயணம் செல்பவர்களுடன் மூன்று மாதங்கள் உடன் இருந்து முதுநிலை மருத்துவ மாணவர்கள் மருத்துவ உதவிகள் செய்திட வேண்டும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் ஆன்மீகப் பயணத்திற்கு மட்டும் இவ்வாறு முதுநிலை மருத்துவ மாணவர்களின் சேவையை கட்டாயப்படுத்துவது மதச்சார்பற்ற தன்மைக்கு எதிரானதாகும். புனிதப் பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களும் இந்நாட்டின் குடிமக்கள் என்ற அடிப்படையில்,

அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு, அடிப்படை வசதிகள், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது அரசுகளின் கடமையாகும். எனவே, முதுநிலை மருத்துவ மாணவர்களை இப்பணியில் ஈடுபடுத்தும் திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். இளம் மருத்துவர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் டி.ஆர்.பி திட்டத்தையே முழுமையாக ரத்து செய்திட வேண்டும். நீட் முதல்நிலை ஒரே நாளில், ஒரே நேரத்தில், ஒரே அமர்வில் நடத்த வேண்டும். மருத்துவத்துறையில் இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளை திணிப்பை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், தமிழ்நாட்டில் 1 லட்சத்து 57 ஆயிரம் பேர் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதன்படி, அவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளை அரசு செய்து தருவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுதவிர, எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் குழந்தைகளுக்கு உதவி தொகை வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை நாங்கள் மனமார வரவேற்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.