Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கடைகளுக்கு தமிழில் பெயர்ப்பலகை வைக்க அவகாசம் கோரி வழக்கு சென்னை மாநகராட்சி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை மாநகராட்சி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகளுக்கும் தமிழில் பெயர் பலகைகள் வைக்க வேண்டும் என்று கடந்த ஏப்ரல் மாதம் சென்னை மாநகராட்சியும் அனைத்து மாவட்ட அதிகாரிகளும் உத்தரவு பிறப்பித்தனர். அந்த உத்தரவில் மே 30ம் தேதிக்குள் கடைகளின் பெயர் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும். தவறினால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மும்பையில் உள்ள இந்திய சில்லறை வர்த்தகர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட வணிகச் சின்னங்களின் அடிப்படையில் பெயர் பலகைகள் அமைக்கப்பட வேண்டும். அவற்றை மாற்றும் பட்சத்தில் அது வாடிக்கையாளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும். அரசின் உத்தரவை அமல்படுத்த தயாராக உள்ளபோதும், நிதி உள்ளிட்ட காரணங்களால் உடனடியாக அவற்றை மாற்ற இயலாது என்பதால் பெயர்ப்பலகைகளை மாற்ற கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும்.

இது குறித்து சென்னை மாநகராட்சிக்கும் தமிழக அரசுக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளது. எனவே, அவகாசம் கோரி அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்குமாறு சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். தங்கள் சங்க உறுப்பினர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன், ஏற்கனவே ரூ.2 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் ரூவரை செலவு செய்து பெயர் பலகைகள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், பெயர் பலகைகளை மாற்றுவதற்கு கூடுதல் செலவு ஏற்படும் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் சங்கத்தின் கோரிக்கை மனுவை 4 வாரங்களில் பரிசீலிக்குமாறு சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர். அதுவரை கடும் நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.