தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம் நடத்தியதாக வழக்கு; ஒட்டுமொத்த விசாரணைக்கும் தடை: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: தவெக எம்.எல்.ஏ.,விடம் குதிரை பேரம் நடத்தியதாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் ஒட்டுமொத்த விசாரணைக்கும் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டப்பேரவையில் சபாநாயர் ஜே.சி.டி.பிரபாகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர இருப்பதாகவும், ஆளும் தவெக கட்சியின் உறுப்பினராக இருந்தாலும் அத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின் போது தாங்கள் சொல்லும்படி நடந்து கொண்டால் சன்மானமாக 35 கோடி ரூபாய் வரை தருவதாக பேரம் பேசியதாக ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏவான என்.இளையராஜா சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார்.
அதனடிப்படையில், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த யூடியூபர் திருநாவுக்கரசு, திருச்சியைச் சேர்ந்த நரேஷ், சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் உள்ளிட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ளனர்.
இந்த வழக்கில் கைதாகி ஜாமீன் பெற்ற ரமேஷ் என்பவர், குதிரை பேரம் பேசப்பட்டது தொடர்பாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தினர் பதிவு செய்துள்ள வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிடக்கோரி தாக்கல் செய்த மனுவிற்கு ஒன்றிய, மாநில அரசுகள், சிபிஐ ஆகியோர் பதிலளிக்குமாறு உத்தரவிடட்ட உயர் நீதிமன்றம் ரமேஷ் மீதான விசாரணைக்கு மட்டும் தடை விதித்திருந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஜாமீன் பெற்ற சேதுராஜ், கார்த்திக் ஆகியோரும் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும், புதிதாக விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் மாநில காவல்துறையினர் விசாரணையில் நம்பிக்கை இல்லை என்பதால் இந்த வழக்கை சிபிஐ அல்லது வேறு ஏதேனும் விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும் என்று வாதிடப்பட்டது. காவல்துறை தரப்பில் பொய் வழக்கு ஜோடிக்க அவசியம் இல்லை. ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசு தரப்பில், வழக்கின் புலன் விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதால் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க கூடாது என்று வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் ஒவ்வொருவராக சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி மனுதாக்கல் செய்துவருகிறார்கள். எனவே, சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்குகளுடன் இந்த வழக்குகளும் சேர்க்கப்படுகிறது. குதிரை பேரம் தொடர்பாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட வழக்கின் ஒட்டுமொத்த விசாரணைக்கும் தடைவிதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டு, விசாரணையை வரும் 27ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

