Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை அறிவிப்பு பலகைகளில் வெளியிட வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை அறிவிப்பு பலகைகளில் வெளியிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டண விவரங்களை, பள்ளிகளின் விளம்பரப் பலகைகளில் வெளியிடுவதை கட்டாயமாக்கும்படி தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் மே 25ஆம் தேதி உத்தரவிட்டது.

அதன்படி, கட்டண விவரங்களை விளம்பரப் பலகையில் வெளியிடும்படி அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ, பிற வாரிய பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகள் இயக்குனர் ஜூன் 1ஆம் தேதி சுற்றறிக்கை பிறப்பித்தார்.

இந்நிலையில் மாநில தகவல் ஆணைய உத்தரவையும், தனியார் பள்ளிகள் இயக்குனர் பிறப்பித்த அறிவிப்பையும் ரத்து செய்யக் கோரி அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் கே.பழனியப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, தனியார் பள்ளிகள் தகவல் உரிமை சட்டத்தின் வரம்புக்குள் வராது என்ற போதும் கூட தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டப்படி நியாயத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும். எனவே நியாயத்தன்மையை வெளிப்படுத்த மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் கல்விக் கட்டண விவரங்களை விளம்பர பலகைகளில் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்துள்ளார்.