Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா முறைகேடு வழக்கை 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க உயர்நீதிமன்றம் கெடு

சென்னை: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கை 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க, எம்.பி. - எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தடையை மீறி குட்கா பொருட்கள் விற்றதாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர் சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர் எஸ்.ஜார்ஜ், தமிழக முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உள்பட 26 பேருக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி - எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

விசாரணை அதிகாரியிடம் வாக்குமூலம் அளிக்காதவர்கள் பலர் இந்த வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளதால், அவர்களை சிபிஐ தரப்பு சாட்சிகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் அல்லது அனைத்து சாட்சிகளின் வாக்குமூலங்களின் நகல்களை வழங்க உத்தரவிட வேண்டும் என, குற்றம் சாட்டப்பட்டுள்ள சென்னை காவல் துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ் தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை, சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து, ஜார்ஜ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தபோது, குட்கா முறைகேடு வழக்கில் 278 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், சில சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யபடவில்லை. பதிவு செய்யப்பட்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள் மனுதாரருக்கு ஏற்கனவே வழங்கபட்டு விட்டதால், மனுதாரர் கோரிக்கையை நிகரகரித்த சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவில் எந்த தவறும் இல்லை எனக் கூறி, முன்னாள் ஆணையர் ஜார்ஜின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதேசமயம், குட்கா முறைகேடு வழக்கை 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என எம்.பி. - எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார்.