Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெருவிடைக்கோழியால் பெருகுது வருவாய்!

வீட்டுத் தேவைக்காக ஒன்னு ரெண்டு பெருவிடைகோழிகளை அப்பா, அம்மா வளத்தாங்க. நாம அதையே பெரிய அளவுல பண்ணலாம்னுதான் பெருவிடைக்கோழி வளர்ப்புக்கு வந்தேன்’’ என கோழி வளர்ப்பைத் தேர்ந்தெடுத்த கதையோடு பேச ஆரம்பித்தார் பிரவீன்பிரபு. சேலம் மாவட்டம் ஓமலூர் காடையம் பட்டியில் 4 ஆண்டுகளாக பெருவிடைக்கோழி வளர்க்கிறார். ``3 சென்ட்ல 4 சேவல், 6 பெட்டைன்னு 10 கோழிகளை திறந்த வெளியில் வளர்த்தேன். அதுல 7 கோழிங்க நல்லா வளர்ந்தது. 3 செத்துப்போச்சி. அதுக்கப்புறம் 2022ம் ஆண்டில் கோழி வளக்கும்போது வெயில் காலத்துல என்ன பிரச்னை வரும்? மழைக்காலத்துல என்ன பிரச்னை வரும்? எப்போ மேய்ச்சலுக்கு விடணும்? எப்படி அடைகாக்க வைக்கணும்னு சில அனுபவ விவசாயிங்களோட தோட்டத்துல 6 மாசம் பயிற்சி எடுத்தேன். கத்துக் கிட்டதையெல்லாம் பின்பற்ற தொடங்கிய பிறகு, 10ல 9 கோழி நல்லா வளர்ந்தது. அப்போ பகுதிநேர வேலையாத்தான் கோழி வளர்த்தேன். என்னோட முழுநேர வேலைல கிடச்ச சம்பளத்துலர்ந்து சேமிச்சிதான் கோழி வளர்ப்புல முதலீடு பண்ணேன். ஆரம்பத்துல ரூ.3000 முதலீடு செஞ்சேன். அதுல ஒரு ரூ.6000 லாபம் கிடைச்சது. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா முதலீட்டை அதிகரிச்சேன்.

அடுத்து அரை ஏக்கர்ல 50 கோழிகளை வளர்த்தேன். 10 சேவல், 40 பெட்டைக்கோழி. பொள்ளாச்சி, ஈரோடு, திருச்செங்கோடு, பவானி, ஆந்திராவிலிருந்து பெட்டைக்கோழிகளை 2,500 ரூபாய்லர்ந்து 6,000 ரூபாய் வரைக்கும் கொடுத்து வாங்கினேன். அதோட முட்டைலர்ந்து அடுத்த தலைமுறை வளர 4 மாசம் ஆச்சு. நிறத்தைப் பொறுத்து பகுதி பகுதியா பிரிச்சி சேவல், பெட்டைக் கோழிகளை பிரிச்சி வச்சிருக்கோம். மரத்தைச் சுத்தி ஒரு பகுதில 45 அடிக்கு 30 அடில கம்பி வேலி இருக்கு. இதுல ஒரு சேவல், 3 பெட்டைக்கோழிகளை அடைக்கறோம். அதனால உடல்நலமும், இணைகூடலும் சிறப்பா இருக்கும். இந்த அரை ஏக்கர்ல 5 லட்சம் முதலீட்டுக்கு ஒரு வருஷத்துல ரூ.1 லட்சம் வருவாய் வந்துச்சி” என்றவர், கோழிகளைப் பராமரிக்கும் முறை பற்றியும் பேசினார்.``புதுசா வர்ற கோழிகளை தனியா 20 நாட்களுக்கு க்வாரண்டைன் பண்றோம். அரசு பரிந்துரை செய்ற தடுப்பூசிகளை குஞ்சு பொறிச்சதுலர்ந்து 7வது நாள், 14வது நாள், 24வது நாள்னு 3 தடுப்பு மருந்து “ஐ ட்ராப்ஸ்” போட்டு வழக்கமான இடத்துக்குள்ள கொண்டு வர்றோம். வாரத்துக்கு மூனு விதமா உணவு குடுக்கணும். ரெண்டுநாள் கம்பு, ராகி. ரெண்டு நாள் கம்பு, மக்காசோளம். அடுத்த ரெண்டுநாள் கம்பு, கம்பெனி தீவனம்னு மாத்தி மாத்திக் குடுக்கறோம்.

காலைல 10லர்ந்து 12 மணிக்குள்ள தீவனம் வச்சிடுவோம். அப்புறம் அது காட்டுக்கு போய் இரை எடுக்க திறந்து விட்டுடுவோம். தண்ணி எப்பவுமே குடிக்க கிடைக்குற மாதிரி வச்சிடுவோம். நாய், பாம்பு வராம இருக்க மீன் பிடிக்க போடுற வலைல வேலி போட்டிருக்கோம். தினமும் காலைல தீவனம் குடுக்குறது, தண்ணி வைக்கறது, எச்சத்தை கூட்டி அப்புறப்படுத்துறது, இரவுல கோழிகளோட உடல்நிலை, எண்ணிகையை சரி பாக்குறதுன்னு 8 மணி நேரமும் வேலை செய்யணும். உடல்நிலை பாதிக்கப்பட்ட கோழிகளைக்வாரண்டடைன் பண்ணணும், கால்நடை மருத்துவர் கிட்ட கொண்டுபோய் சிகிச்சை குடுக்கணும். வீட்டுத் தோட்டம் இருக்கறவங்க நாலஞ்சு கோழி வளர்க்கலாம். நிலத்துலமரங்கள் அதிகமா இருந்தா நிழல் கிடைக்கும், புழு பூச்சி உணவு கிடைக்கும்ன்றதால, இந்தவகை கோழிகளை விவசாயிகள் தாராளமா வளர்க்கலாம். நீர்வளம் நல்லா இருக்கணும். சுகாதாரமில்லாத உணவு, நீர் காரணமா, உணவு சரியா செரிக்கலன்னா வெள்ளைக்கழிசல் நோய் வரும். முதல்ல கோழி சோர்வா இருக்கும். அப்புறம் கழியும். மூனாவது நிலைல தீவனம் எடுக்காம தலையை ரெக்கைக்குள்ள வச்சிக்கிட்டு முடங்கிடும். இதுல முதல்நிலைல இருக்கும்போதே மருந்து கொடுக்கணும். நோய் வந்த கோழிக்கு வாயைத் திறந்து தீவனம் ஊட்டி விடணும். குழந்தைய பாத்துக்குற மாதிரி பாத்துக்கணும். மருந்து குடுத்தா ஒரே வாரத்துல குணமாகிடும்’’ என்றவர், விற்பனை விபரம் குறித்தும் பகிர்ந்துகொண்டார்.

``பெருவிடைக்கோழி 5 கிலோவில் இருந்து 7 கிலோ வரைக்கும் இருக்கும். 3 அடி உயரம் வரைக்கும் வரும். உயரம், எடையை வச்சி விலையை நிர்ணயம் பண்றோம். வாடிக்கையாளர்கள் வாய்வழி விளம்பரத்துலதான் வர்றாங்க. எங்ககிட்ட கோழி வாங்கினவங்க, ரிப்பீட் கஸ்டமரா எங்க கிட்டயே வர்றாங்க. பெருவிடைக் கோழி வளர்ப்பிலிருந்து நிலையான வருவாய் வர்றதுக்கு 2 ஆண்டுகள் ஆச்சு. எடுத்ததும் அதிகமா முதலீடு போடக்கூடாது. படிப்படியா கத்துகிட்டு மெதுவா முதலீட்டை அதிகரிக்கணும். ஏன்னா, இது உயிருள்ள பொருள்ன்றதால எப்பவும் ரிஸ்க் இருக்கு. கடினமா உழைச்சாத்தான் பெருவிடைக்கோழி வளர்ப்பில் லாபம் பார்க்க முடியும். தீவனத்துக்கு மட்டும் மாசத்துக்கு 20 ஆயிரம் ஆகுது. இடத்துக்கான முதலீடு, மருத்துவ செலவு, மின்சாரம், தொழிலாளர்களுக்கு ஊதியம் எல்லாம் போக மாதம் சராசரியா முப்பதாயிரம் ரூபாய் லாபம் கிடைக்குது. வாராவாரம் வெள்ளிக்கிழமை பெரு விடைக்கோழி வளர்ப்பு பயிற்சி குடுக்கறேன்” என நிறைவாகக் கூறினார்.

தொடர்புக்கு:

பிரவீன்பிரபு: 99656 16194.