Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கோழி எருவில் கோடி நன்மைகள்!

கோழிப்பண்ணைக் கழிவுகளைக் கொண்டு தயாரிக்கப்படும் மக்கிய எருவில் சில விசேஷத்தன்மைகள் காணப்படும். அதன் நிறம் பழுப்பு நிறத்திலிருந்து கறுப்பு நிறத்திற்கு மாறும். மக்கிய எரு வாசனை இல்லாமல் இருக்கும். எருவின் குவியல் மூன்றில் ஒரு பாகம் குறையும். உறுதியாகவும் இருக்கும். குவியலின் வெப்பநிலை காற்றின் வெப்பநிலை போல் ஒரே மாதிரியாக இருக்கும். முதிர்ந்த எரு அதிக கனமின்றியும், நயமாகவும் இருக்கும். மக்கிய உரம் தயார் செய்ய உயரமான நிழல் உள்ள இடம் மிகவும் உகந்தது. குவியலின் ஈரப்பதத்தின் அளவை, ஈரமானி அல்லது குவியலில் இருந்து கை அளவு எருவினை எடுத்து விரல்களால் நசிப்பதன் மூலம் அளக்க முடியும். மக்கிய எருவிலிருந்து அதிகமான தண்ணீர் வெளிவந்தால், பின் ஈரப்பதம் 60 சதவீதத்திற்கு மேலாக இருக்கும் என கருதப்படுகிறது. சொட்டாக குறைவான தண்ணீர் கசிந்தால், பின் ஈரப்பதம் போதும் என கருதப்படுகிறது. அதாவது 60 சதவீதம் உள்ளது எனலாம். ஒவ்வொரு எருக் குவியலும், மக்குவதற்குத் தேவையான வெப்பத்தைத் தக்க வைக்க குறைந்தபட்சம் ஒரு டன் இருக்க வேண்டும். குவியலை ஊட்டமேற்ற நுண்ணூட்டச் சத்துக்களை மக்கிய எருவுடன் கலக்கலாம்.

கோழி எருவின் மதிப்பு

கால்நடை எருக்களில், குறிப்பாக கோழி எருவில் தழைச்சத்து அதிகமாக காணப்படுகிறது. அம்மோனியா ஆவியாதல் மூலமாக எருவிலுள்ள தழைச்சத்து இழப்பாகிறது. இதனால் கோழிக்கழிவிலுள்ள சத்துகள் குறைந்து விடுகின்றன. கோழிப்பண்ணைக் கழிவை தென்னை நார்க்கழிவு போன்ற கரிமச்சத்து நிறைந்த பொருட்கள் மற்றும் தகுந்த நுண்ணுயிரிகள் கலந்து மட்கச் செய்வதால் தரம் வாய்ந்த கோழி எரு கிடைக்கும். இம்முறையில் சுற்றுச்சூழலுக்கு நன்மை விளைவிக்கும் வகையில் கோழி எருவை மதிப்புமிக்க எருவாக மாற்றமுடியும்.

கோழி எருவின் நன்மைகள்

கோழிப்பண்ணைக் கழிவில் மற்ற கால்நடைகளின் கழிவைக் காட்டிலும் அதிக அளவு தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் கால்சியம் அடங்கியுள்ளது. இத்தகைய சத்துகள் இக்கழிவினை சிறந்த உரமாக மாற்றிப் பயன்படுத்துவதற்கு ஊக்கமளிக்கிறது. கோழிப்பண்ணைக் கழிவை தென்னை நார்க்கழிவுடன் கலந்து மக்கச் செய்வதன் மூலம் பயிர்களுக்கு ஒரு சிறந்த இயற்கை உரத்தைத் தயாரித்து பயன்படுத்தலாம். கோழிப்பண்ணைக் கழிவிலுள்ள அங்ககச் சத்துக்களை பயிர்களுக்கு கிடைக்கச் செய்ய, இக்கழிவை அம்மோனியா ஆவியாதலைக் குறைக்கும் வகையில் மக்க வைக்க வேண்டும். இத்தொழில்நுட்பம் கோழிவளர்ப்பில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கோழி எருவை எக்டருக்கு 6 டன் என்ற அளவில் இயற்கை உரமாக அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.