கோவையில் கடும் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் அவதி
கிணத்துக்கடவு: கோவை மாவட்டத்தில் இன்று அதிகாலை கடும் பனிப்பொழிவு நிலவியது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். டிட்வா புயல் காரணமாக கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக லேசான மழை பெய்து வந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை கோவை புறநகர் பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவியது. நீலாம்பூர், பட்டணம், வெள்ளலூர், சிந்தாமணிபுதூர், மலுமிச்சம்பட்டி, போடிபாளையம், சீரப்பாளையம், மதுக்கரை, இடிகரை உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவியது. குடியிருப்புகள், சாலைகள், விளைநிலங்கள் என அனைத்து பகுதிகளிலும் பனிமூட்டம் சூழ்ந்து இருந்தது. எதிரே இருப்பவை கூட தெரியாத அளவிற்கு பனி சூழ்ந்து காணப்பட்டது. சேலம்-கொச்சின் புறவழிச்சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு கடும் பனிமூட்டம் சாலையை மூடியிருந்தது.
இதனால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்றனர். ஊட்டியைபோல காலை நேரத்தில் கோவை புறநகர் பகுதியில் நிலவிய காலநிலையை பொதுமக்கள் ரசித்தனர். காலை 8 மணிக்கு பின்பு வெயில் அடிக்க துவங்கியதும் பனிமூட்டம் விலகியது. இதேபோல அப்பகுதிகளில் இரவு நேரங்கள் மற்றும் அதிகாலை நேரங்களில் குளிரும் சற்று அதிகரித்து காணப்படுகிறது. கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதியிலும் இன்று அதிகாலை நேரத்தில் திடீரென கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால், ஒருவர் முகம் மற்றொருவருக்கு தெரியவில்லை. எதிரே வருபவர்கள் யாரென்று தெரியாத நிலை ஏற்பட்டது. அதிகாலை நேரத்தில், சைக்கிள் மற்றும் பைக்குகளில் வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றனர். ஒரு சிலர் வாகனத்தை ஆங்காங்கே நிறுத்திக் கொண்டனர். அதிகாலை நேரத்தில் நடை பயிற்சி செய்பவர்கள், நடை பயிற்சிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதிகாலை சுமார் 5 மணிக்கு துவங்கிய இந்த கடும் பனிப்பொழிவு காலை 7 மணிக்கு மேல் படிப்படியாக விலக தொடங்கியது.