நைரோபி: கென்யாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருவதுடன், வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக, மலைப்பாங்கான மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அரசு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்துவந்தது.
இந்நிலையில், நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள எல்கேயோ மரக்வெட் மாகாணத்தின் செசோங்கோச் என்ற மலைப்பகுதியில் பெய்த கனமழையால் கோர நிலச்சரிவு ஏற்பட்டது. கண் இமைக்கும் நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணோடு மண்ணாகின. சாலைகள் துண்டிக்கப்பட்டு, அப்பகுதிக்குச் செல்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த கோர சம்பவத்தில் இதுவரை 21 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் கிப்சும்பா முர்கோமென் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், 30க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என அவர்களது குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.
படுகாயமடைந்த 25 பேர், ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு எல்டோரெட் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என அரசு மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.
