Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கச்சா எண்ணெய் விலையில் கடும் சரிவு ; இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையுமா!!

டெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்துள்ள நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மத்திய கிழக்கில் போர் பதற்றம் தணிந்திருப்பதும், கச்சா எண்ணெய் விநியோகம் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பும் சந்தையில் தொடர்ந்து நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால், கச்சா எண்ணெய் விலைகள் கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளன.

ஒரு பேரல் பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை அமெரிக்க டாலர் 73-க்குக் கீழே சரிந்து, பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது. அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் விலை சுமார் 69 டாலராகவும் குறைந்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதிக்கான ஒப்பந்தம், ஈரான் மீதான எண்ணெய் ஏற்றுமதித் தடைகளை அமெரிக்கா தளர்த்தியதால் அதிகரித்துள்ள விநியோகம், ஹோர்முஸ் நீரிணை வழியாக வணிகக் கப்பல்களின் போக்குவரத்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில வாரங்களில் மட்டும் கச்சா எண்ணெய் விலை சுமார் 8% முதல் 24% வரை வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த சூழலில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாகக் குறைந்தாலும், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உடனடியாகக் குறைய வாய்ப்பில்லை என்கிறார்கள் நிபுணர்கள். ஏனென்றால் எண்ணெய் நிறுவனங்கள் (OMCs) ஏற்கனவே அதிக விலைக்கு வாங்கிய கச்சா எண்ணெயையே தற்போது சுத்திகரித்து விற்பனை செய்கின்றன. அதே போல உலகளவில் கச்சா எண்ணெய் விலை உச்சத்தில் இருந்தபோது, இந்தியாவில் விலையை உயர்த்தாமல் எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தை ஏற்றன. தற்போது விலை குறைந்துள்ளதை பயன்படுத்தி அந்த நஷ்டத்தை நிறுவனங்கள் ஈடு செய்கின்றன என்கிறார்கள் நிபுணர்கள்.