ஹெல்த்தி ரெசிபிஸ்: டேஸ்ட்டி குக்கிங் (Healthy Recipes: Tasty Cooking) செயலி, சுவையையும் ஆரோக்கியத்தையும் ஒன்றாக கொடுக்கும் ஒரு பயனுள்ள செயலி. ஆரோக்கியமான உணவு என்றாலே சுவையற்றது என்ற பொதுவான எண்ணத்தை மாற்றும் வகையில், இந்த செயலி பல்வேறு சமையல் குறிப்புகளை வழங்குகிறது.
இந்த செயலியின் முக்கியமான பயன், அன்றாட உணவுத் திட்டமிடலை எளிதாக்குவதுதான். காலை உணவு முதல் இரவு உணவு வரை எந்த நேரத்திற்கும் ஏற்ற ஆரோக்கியமான சமையல் குறிப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன. இதனால் தினமும் என்ன சமைப்பது என்ற குழப்பம் குறையும். அதேசமயம் சத்தான உணவுகளை குடும்பத்தினருக்கு வழங்குவதும் சுலபமாகிறது.
உடல் எடையைக் கட்டுப்படுத்த விரும்புபவர்கள், உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள், நீரிழிவு அல்லது இதய ஆரோக்கியம் குறித்து கவனம் செலுத்துபவர்கள் போன்றோருக்கும் இந்த செயலி பயனுள்ள உணவுக் குறிப்புகளைக் கொடுக்கிறது. குறைந்த கலோரி கொண்ட உணவுகள், அதிக புரதச்சத்து கொண்ட உணவுகள், சைவ , அசைவ உணவுகள் போன்ற பல்வேறு வகை சமையல் குறிப்புகள் இதில் இடம்பெறுவதால், ஒவ்வொருவரும் தங்களது தேவைக்கேற்ப உணவுகளைத் தேர்ந்தெடுக்க முடிகிறது.
சமையலில் புதியவர்களுக்கும் இந்த செயலி ஒரு நல்ல வழிகாட்டியாக செயல்படுகிறது. அதிலும் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்துடன் சுவையும் அவசியம் என்பதால் அதற்கேற்ற லன்ச் பாக்ஸ் மெனுவும் இதில் கிடைக்கும். ஒவ்வொரு சமையல் குறிப்பும் படிப்படியாக விளக்கப்பட்டிருப்பதால், அனுபவம் இல்லாதவர்கள்கூட எளிதாக சமைக்க முடியும். சில சமையல் குறிப்புகளுக்கு வீடியோ வழிகாட்டுதல்களும் வழங்கப்படுவதால், செய்முறையைப்
புரிந்துகொள்வது எளிது.
வீட்டில் ஏற்கனவே உள்ள பொருட்களை வைத்து என்ன சமைக்கலாம் என்பதை கண்டறியவும் இந்த செயலி உதவுகிறது. இதன் மூலம் தேவையற்ற பொருட்கள் வாங்கப்படுவது குறைவதுடன், உணவு வீணாகும் நிலையும் தவிர்க்கப்படுகிறது. குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் பிஸியான குடும்பங்களுக்கு இது நேரத்தை மிச்சப்படுத்தவும் உதவுகிறது.


