Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சுகாதார செவிலியர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்களுக்கு பதவி உயர்வு ஆணைகளை வழங்கினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!

சென்னை: 405 பகுதி சுகாதார செவிலியர்கள், 117 வட்டார சுகாதார மேற்பார்வையாளர்களுக்கு அமைச்சர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதவி உயர்வு ஆணைகளை வழங்கினார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (09.12.2025) சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் அலுவலகத்தில், 405 பகுதி சுகாதார செவிலியர்கள் மற்றும் 117 வட்டார சுகாதார மேற்பார்வையாளர்களுக்கு பதவி உயர்வு ஆணைகளை வழங்கினார். பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

பதவி உயர்வு ஆணை வழங்குதல்

முதலமைச்சர் வழிகாட்டுதலோடு, 405 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பகுதி சுகாதார செவிலியர்களாக பதவி உயர்வு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இவர்களுடைய பணி என்பது கிராமத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பது, கர்ப்பிணி தாய்மார்களை பதிவு செய்வது, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது, ஊட்டச்சத்து வழங்குவது, நலக்கல்வி சம்மந்தமாக உதவுவது, குடற்புழு நீக்கத்திற்கு மாத்திரைகள் வழங்குவது போன்ற சிறப்பான பணிகளை மேற்கொள்ளும் இவர்களது பதவி உயர்வு என்பது பாராட்டுக்குரியது. தொடர்ந்து இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு இதுபோன்ற பதவி உயர்வுகளை தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. அதேபோல் 117 சுகாதார ஆய்வாளர்களுக்கு வட்டார சுகாதார மேற்பார்வையாளர்களாக பதவி உயர்வு பெறுகிறார்கள். இவர்களது பணி என்பது தொற்று நோய் தொடர்பான அனைத்து விவரங்களும் கிராமங்கள் தோறும் கணக்கெடுப்பது, தொற்றுநோய் பரவும் வாய்ப்புள்ள பகுதிகளில் முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பதற்குரிய பணிகள், இயற்கை சீற்றத்தால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளை சரிசெய்தல், குடிநீர் ஆதாரங்களை ஆய்வு செய்தல், நோய்பரவாமல் தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்வது, குடும்பநலத்திட்டம், பிறப்பு இறப்பு போன்ற பதிவுகள் செய்வது. இவர்களுக்கு தோற்றுவிக்கப்பட்ட இடங்கள் 314 அதில் காலியாக இருந்த 117 இடங்களுக்கு பதவி உயர்வு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் வழிகாட்டுதலோடு, இந்த அரசுப் பொறுப்பேற்றதற்கு பிறகு வெளிப்படைத்தன்மையுடன் பணிநியமன ஆணைகளும், பணிமாறுதல் ஆணைகளும், பதவி உயர்வு ஆணைகளும், புதிய பணியிடங்கள் உருவாக்கப்படுவது என்பது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த துறையின் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த அரசு பொறுப்பேற்ற நாள் முதல் தற்போது வரை, 35,702 புதிய பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல் 43,375 பேருக்கு வெளிப்படைத்தன்மையுடன் பணியிடமாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்று வழங்கப்பட்ட பதவி உயர்வு ஆணையுடன் சேர்த்து இதுவரை 16,610 பேருக்கு பதவி உயர்வு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 17,780 புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. ஆக இதுவரை 1,12,945 பேர் இத்துறையின் மூலம் பயன்பெற்றிருக்கிறார்கள். இந்த துறையின் வரலாற்றில் முதன்முறையாக புதிய பணியிடங்கள் நியமிக்கப்படும்போதே கலந்தாய்வு நடத்தி அவரவர் விரும்பும் இடங்களுக்கே பணி ஆணை வழங்கப்படுவது என்பது இதுவே முதல் முறை.

சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் தொடர்பான கேள்விக்கு

முதலமைச்சர் தமிழ்நாட்டில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் ஒன்று அமையப் பெற வேண்டும் என்று ஏற்கெனவே முடிவெடுத்து, இந்த அரசுப் பொறுப்பேற்றதற்கு பிறகு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அந்த தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்தார்கள். அந்த தீர்மானத்தை தொடர்ந்து ஆளுநர் கிடப்பில் வைத்து மிக நீண்ட போராட்டத்திற்கு பிறகு இரண்டாவது சட்டமன்ற தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தார்கள். குடியரசுத் தலைவர் அலுவலகத்திலிருந்து உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட அந்த தீர்மானம் உள்துறை அமைச்சகத்தின் வாயிலாக தமிழ்நாட்டில் உயர்கல்வித்துறை, மருத்துவத்துறை, ஆயுஷ் துறை போன்ற பல்வேறு துறைகளுக்கு பல்வேறு வகைகளில் தெளிவுரைகள் கேட்டு தொடர்ச்சியாக உள்துறை அமைச்சகம் திருப்பி அனுப்பிக் கொண்டே இருந்தது. இதனை திருப்பி அனுப்பும்போது முதலமைச்சர் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனைப் பெற்று மீண்டும் அனுப்பிய திருத்தங்களுக்கு பதிலை அனுப்பிக் கொண்டே இருந்தோம். ஆனாலும் திரும்ப திரும்ப அந்த தீர்மானம் என்பது உள்துறை அமைச்சகத்தால் திரும்ப திரும்ப அனுப்பப்பட்டு கொண்டே இருந்தது.

இந்நிலையில் கடந்த அக்டோபர் திங்கள் 15ஆம் தேதி இரண்டாவது முறையாக சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் அமைய வேண்டும் என்கின்ற மசோதா முதலமைச்சர் சில கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆளுநர் அக்டோபர் 15ம் தேதி அனுப்பிய மசோதாவை இதுவரை தன் இருப்பிலேயே வைத்திருந்துவிட்டு தற்போது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருப்பதாக தெரிகிறது. உண்மையிலேயே இரண்டாவது முறை ஆளுநர் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்து தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைய உறுதுணையாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. சித்த மருத்துவம் என்பது தமிழ்நாட்டில் பல கோடி பேர் விரும்பி ஏற்றுக் கொள்ளும் மருத்துவ முறைகளில் ஒன்று. சங்க காலத்திலிருந்து சித்த மருத்துவத்தின் சிறப்பு என்பது தமிழ்நாட்டில் போற்றக்கூடியது, பாராட்டுக்குரியது. தமிழர்கள் விரும்பி நேசித்த தமிழர்களின் பாரம்பரிய சிகிச்சை முறைகளில் மிகப் பிரதானமானது சித்த மருத்துவம். இந்த சித்த மருத்துவத்திற்கு முதலமைச்சர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு ரூ.2 கோடி அளவிற்கு நிதி ஆதாரம் வழங்கி அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவமனையில் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அலுவலகம் தயாரான நிலையில் 25 ஏக்கர் நிலம் மாதவரம் பால்பண்ணை பகுதியில் தேர்வு செய்யப்பட்டு சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு அரசு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியது. ஆனால் ஆளுநரின் ஒப்புதல் என்பது இரண்டாவது முறையாக ஏமாற்றம் அளிக்கிறது. தமிழர்களின் பாரம்பரிய சித்த மருத்துவத்தை ஏன் ஆளுநர் வெறுக்கிறார் என்று தெரியவில்லை. இது உண்மையிலேயே ஒட்டுமொத்த தமிழர்கள் வருத்தப்படுகின்ற மிகப் பெரிய நிகழ்வாகும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள். இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் ப.செந்தில்குமார். இ.ஆ.ப., பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் மரு.சோமசுந்தரம், மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்குநர் மரு.சித்ரா, கூடுதல் இயக்குநர்கள் மரு.சேரன், மரு.தேவபார்த்தசாரதி, மரு.சம்பத், இணை இயக்குநர்கள் மரு.செந்தில், மரு.நிர்மல்சன், மரு.கிருஷ்ணலீலா ஆகியோர் உடனிருந்தனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.