கர்நாடக மாநிலத்தில் 2023ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அப்போது முதல்வர் பதவிக்கு சித்தராமையா, காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் இடையே கடும் போட்டி நிலவியது. இதையடுத்து டெல்லி சென்ற இருவரையும் மேலிட தலைவர்கள் சமாதானப்படுத்தினர். அவர்கள் முன்னிலையில் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வராக இருப்பது என ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி முதல்வராக சித்தராமையா பதவியேற்றார்.
மாநிலத்தில் 5 இலவச திட்டங்களை செயல்படுத்தினார். கட்சியினரை அரவணைத்து சிறப்பாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் டி.கே.சிவகுமார் ஆதரவாளர்கள் ஓராண்டு ஆட்சி நிறைவிலேயே அவ்வப்போது தலைமை மாற்றம் குறித்து பேசத்தொடங்கினர். இதனால் கட்சிக்குள் பனிப்போர் நிலவியது. சித்தராமையா ஆட்சி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இந்த பனிப்போர் தீவிரமடைந்தது. கட்சி மேலிடத்துக்கு அழுத்தம் அதிகரித்தது. ஆனால் முதல்வர் சித்தராமையா நானே 5 ஆண்டும் முதல்வராக தொடர்வேன் என்று கூறிவந்தார்.
ஆனால் டி.கே.சிவகுமார், கட்சி மேலிடம் தான் தலைமை மாற்றம் குறித்து முடிவெடுக்கும். சொன்ன வார்த்தையை காப்பாற்ற வேண்டும் என்று சித்தராமையாவை மறைமுகமாக தாக்கி பேசினார். இதையடுத்து கட்சி மேலிட தலைவர்கள் சித்தராமையா, டி.கே.சிவகுமார் இருவரையும் காலை சிற்றுண்டி விருந்துக்கு சென்று தனியே ஆலோசனை நடத்தும்படி கூறினர். அதன்படி டி.கே.சிவகுமார் வீட்டுக்கு சித்தராமையாவும், சித்தராமையா வீட்டுக்கு டி.கே.சிவகுமாரும் சென்று ஆலோசனை நடத்தி இருவரும் ஒற்றுமையாக இருப்பதாக தெரிவித்தனர்.
ஆனால் இரண்டரை ஆண்டு கடந்ததை தொடர்ந்து டி.கே.சிவகுமார் ஆதரவாளர்கள் மீண்டும் தலைமை மாற்றம், அமைச்சரவை மாற்றம் குறித்து சர்ச்சையை கிளப்பினர். இந்நிலையில், 5 மாநில தேர்தல், கர்நாடக இடைத்தேர்தல் ஆகியன நிறைவடைந்தது. பின்னர் டெல்லி தலைவர்கள் சித்தராமையா, டி.கே.சிவகுமாரை அழைத்து பேசினர். சித்தராமையாவும் ராகுல்காந்தி நேரடியாக ஆலோசனை நடத்தி முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் படி தெரிவித்தார்.
அதற்காக சித்தராமையாவுக்கு ராஜ்யசபா சீட்டும், மகனுக்கு அமைச்சர் பதவியும் வழங்குவதாக உறுதியளித்தார். இதை தொடர்ந்து சித்தராமையா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு புதிய முதல்வராக டி.கே.சிவகுமார் பதவியேற்றுக்கொண்டு சாதித்து காட்டியுள்ளார். 12 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். சாதிவாரியாக சமமாக அனைவருக்கும் வாய்ப்பு அளித்துள்ளார்.
பதவியேற்றவுடன் இளைஞர்களை கவரும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பஸ்சில் இலவச பயணம் குறித்து அறிவிப்பது குறித்து அமைச்சரவையில் ஆலோசனை நடத்தியுள்ளார். அதே சமயம் மேகதாது அணை விவகாரத்தில் டி.கே.சிவகுமார் உறுதியாக இருப்பதால் தமிழ்நாட்டுக்கு நெருக்கடி அதிகரிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நாட்டின் பணக்கார முதல்வர் என்ற பெயர் பெற்றுள்ள இவருக்கு ரூ.1400 கோடிக்கு மேல் சொத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இவர் தன்னை எளிமையாக காட்டிக்கொள்ள பழைய டொயோட்டா கார் ஒன்றையே சொந்தமாக வைத்துள்ளார். இவர் சோனியா, பிரியங்கா காந்தி, ராகுலின் அன்புக்கு உரியவர். கர்நாடகாவில் அவரது தலைமையில் புதிய ஆட்சி மலர்ந்துள்ளது. டி.கே.சிவகுமார் அனைவரையும் அரவணைத்து செல்லக்கூடியவர். எதிர்க்கட்சியாக இருந்தாலும் மூத்த தலைவர்களுக்கு மரியாதை அளிக்க கூடியவர். அவரது ஆட்சியில் கர்நாடக மாநிலம் புதிய வளர்ச்சி பாதையில் பயணிக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


