Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உங்களிடம் இருக்கும் இந்த 7 குணங்களை கவனித்திருக்கிறீர்களா?!

ஒரு சூழல்நிலை, ஒரு சந்தர்பத்தை ஆண்கள் கையாள்வதற்கும், பெண்கள் கையாள்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. ஆண்கள் ஒரு செயலுக்கு சாதாரணமாக வெளிப்படுத்தும் சுபாவத்திற்கும், பெண்கள் வெளிப்படுத்தும் சுபாவத்திற்கும் ஏராளமான வித்யாசங்கள் உண்டு. உதாரணமாக, சக தோழி தனது காதலுக்கு உதவி நாடி வரும் போது, அந்த பெண்ணின் மனதில் ஒன்று பொறாமை குணம் வெளிப்படும். அல்லது அவளை பாதுகாக்க வேண்டும் என்கிற கோபத்தை வெளிப்படுத்துவார்கள். இதுவே, ஆண்கள் என்றால் முதல் வேலையாக சேர்த்து வைத்துவிட்டு, ட்ரீட் கேட்க ஆரம்பித்து விடுவார்கள். இதுபோல ஆண்களிடம் ஒப்பிடுகையில், பெண்கள் மத்தியில் இருக்கும் ஏழு அதிசய குணங்கள் என்னென்ன, எந்தெந்த குணங்கள் நம்மை ஆண்களிடம் இருந்து வேறுப்பட்டவர்களாகக் காட்டி நம்மை பலவீனமாக்குகின்றன. ஒரு சிறு ஆய்வு.

குணம் 1

பொதுவாக ஒரு பெண் மத்தியில் இன்னொரு பெண்ணை பாராட்டினாலோ, அல்லது வருணித்தாலோ உடன் இருக்கும் பெண்ணுக்கு கோபம் வரும். தனது அங்கீகாரம் மறுக்கப்படுவதாக உணர்வார்கள். இதனை ஆண்கள் கண்டுகொள்வது கூட இல்லை. காரணம் அவர்கள் என்றோ உலகைப் பார்க்கத் துவங்கி விட்டார்கள். எதார்த்த மனநிலை அதிகம். அதை நாம் வளர்த்துக்கொள்ள முயற்சிக்கலாம். ஒரு பெண் பாராட்டப் படுகிறாள் எனில் ஏன், எதற்கு, நம்மிடம் என்ன இல்லை, எதை வளர்த்துக்கொள்ள வேண்டும் என யோசிக்கலாம். அழகு சார்ந்த பாராட்டுகளை கண்டுகொள்ள வேண்டாம். அதில் இங்கே நிறைய முரண்கள் உண்டு. அதே சமயம் திறமை சார்ந்து, வேலை, உள்ளிட்டவற்றில் கற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்க.

குணம் 2

சராசரியாக பெண்கள் ஓர் ரகசியத்தை பாதுகாக்கும் நேரம் 47 மணிநேரம் 16 நிமிடங்கள் என்பது ஆய்வு முடிவு. காரணம் ஆண்கள் பொதுவாக மனதில் எதையும் பதிய வைக்க மாட்டார்கள். தேவையான பாசிட்டிவ் குணங்கள்தான் அவர்கள் சேமித்து வைப்பார்கள். அல்லது அவர்கள் தங்களை திசைதிருப்ப விளையாட்டு, நண்பர்கள் சந்திப்பு, வேலை, பணி நண்பர்கள் என இருப்பதும் ஒரு காரணம். ஆனால் பெண்கள் எல்லாவற்றையும் மறக்காமல் ஞாபகம் வைத்ததன் விளைவுதான் இது. மேலும் அவர்கள் ரகசியத்தை உளறுகிறோம் என்கிற உணர்வே இல்லாமல் பல இடங்களில் சொல்வதுண்டு. இப்போது அந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுவருகிறது.

குணம் 3

பெண்களால் அவர்களின்கைகளை வெறுமேன வைத்துக் கொள்ள முடியாதாம். அதனால், ஹேண்ட்பேக், பர்ஸ், புத்தகம் என எதையாவது வைத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்கிறது ஆய்வுகள். அல்லது உடன் இருக்கும் நபர்களின் கைகளையாவது பிடித்துக் கொள்வார்கள். ஏனெனில் கடந்த 20-30 வருடங்களாகத்தான் பெண்கள் வெளி உலகையே பார்க்கின்றனர் என்கையில் இந்த பிடிமானம் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. அதையும் மாற்றிக்கொள்ள முயற்சித்தால் தனித்து செயல்படும் திறமை வளரும்.

குணம் 4

பெண்களால் குளிக்க செல்லும் முன்பு மேசையில் வைத்த ஹேர் பேண்டை கண்டுபிடிப்பது கஷ்டம். ஆனால் சரியாக ஏழு மாதத்திற்கு முன்பு, வெள்ளிக்கிழமை இரவு பத்து மணியளவில் நீங்கள் என்ன சொன்னீர்கள் என்பதை நினைவில் வைத்திருப்பார்கள். ஏனேனில் பெண்கள் மனதில் உணர்வுப் பூர்வமாக இணைக்கப்பட்ட அத்தனை விஷயங்களும் மனதில் பதிந்துவிடும். இதே ஹேர்பேண்ட் ஒருவேளை கணவரோ, அல்லது காதலனோ வாங்கிக் கொடுத்தத்தாக இருப்பின் ‘மரணப் படுக்கையிலும் மறக்காது என்னவனே’ என்னும் நிலையில் வைத்திருப்பார்கள்.

குணம் 5

ஓர் ஆய்வில் சராசரியாக பெண்கள் வருடத்திற்கு 120 மணிநேத்தை கண்ணாடி பார்ப்பதற்கு பயன்படுத்துகிறார்கள் என அறியப்பட்டுள்ளது. இந்த கணக்கை வைத்துப் பார்த்தால் அவர்களது ஒட்டுமொத்த வாழ்க்கையில் ஐந்து வருடத்தை கண்ணாடி முன்பே கழிக்கிறார்கள் பெண்கள். அதுவும் வளர்ந்து வந்த விதம்தான். பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என சொல்லி சொல்லி வளர்த்த சமூகத்தின் பிரச்னை இது. அதுவும் இக்கால ஜென் Z உலகில் மெல்ல மாறி வருகிறது.

குணம் 6

பெண்களுக்கு பல ஆண்களை பிடிக்கும் க்ரஷ் என்பர். ஆனால் ஒரு ஆணின் மீது தான் அவர்களது காதல் எப்போதுமே சார்ந்திருக்குமாம். விவாகரத்து, காதல் ரத்து, என இருந்தாலும் அடுத்து ஒருவரை ஏற்றுக்கொள்ளும் போது கூட அது முழு மனதாக இருக்காது. அதே போல் அந்தக் காதல் தன் பொறுமையை எவ்வளவு சோதித்தாலும் சகித்துக் கொள்ளும் திறன் கொண்டவர்கள் பெண்கள். காரணம் பெண்ணின் உணர்வுகள் முதலில் தனக்கு ஏற்ற ஆத்மாவைத்தான் தேர்வு செய்யும் என்கிறது ஆய்வுகள்.இதனாலேயே ஆண்கள் ஓரிரு மாதங்கள், அல்லது ஒரு வருடங்களில் முன்னாள் காதலில் இருந்து வெளியேறி விடுவர். ஆனால் பெண்கள் பல வருடங்கள் கழித்தும் வெளியில் காட்டாமலேயே தங்களது காதல் வலியை மறைத்து வைப்பார்கள்.

குணம் 7

எதற்கும் லாயக்கு இல்லை என்று கூறினால் பெண்களுக்கு சுயமரியாதை பிரச்னை வரும். ஏனெனில் பெண்களைப் பொருத்தவரை பெரும்பாலும் அம்மா வீடு, கணவர் வீடு என மாறி மாறி இருக்கும் வாழ்க்கைக்காகவே வளர்க்கப்பட்டவர்கள். எங்கே சென்றாலும் நம் சொந்த உழைப்பில் நாம் இல்லையோ என்கிற மனநிலை எப்போதும் அவர்களுக்குள் இருக்கும். கிட்டத்தட்ட லாயக்கு இல்லை என்னும் வார்த்தைகள் எரிந்துகொண்டிருக்கும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதற்கு சமம். ஆனால் இந்த மனநிலை அவசியமில்லை, எங்கும் நீங்கள் நீங்களாக இருந்து உங்கள் முக்கியத்துவத்தை உணர்த்த முயற்சியுங்கள்.

- கவிதாபாலாஜிகணேஷ்.