உடல் எடையைக் குறைக்க பலர் உணவுக் கட்டுப்பாடு, நடைப்பயிற்சி, ஜிம், யோகா என பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். இருப்பினும் சிலருக்கு மாதக்கணக்கில் முயற்சி செய்தும் உடல் எடை குறைவதில்லை. இதற்கு முயற்சி போதவில்லை என்பது மட்டுமே காரணம் அல்ல. உடலுக்குள் நடைபெறும் ஹார்மோன் மாற்றங்கள், வளர்சிதை மாற்றக் கோளாறுகள், ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் சில மறைந்திருக்கும் நோய்களும் காரணமாக இருக்கலாம். எனவே, காரணத்தை யூகிப்பதை விட, தேவையான மருத்துவப் பரிசோதனைகள் மூலம் கண்டறிவது மிகவும் முக்கியம்.
முதலில், தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை மதிப்பிடும் TSH, Free T3, Free T4 பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. தைராய்டு சுரப்பி சீரற்ற செயல்பட்டால் (Hypothyroidism), வளர்சிதை மாற்ற வேகம் குறைந்து, உடல் எடை எளிதில் அதிகரிக்கலாம் அல்லது குறையாமல் இருக்கலாம். இதனுடன் சோர்வு, குளிர் தாங்காமை, மலச்சிக்கல், முடி உதிர்தல், சிறிது தூரம் நடந்தாலே சிலருக்கு மூச்சு வாங்குதல், பகலில் தூக்கம், இரவில் தூக்கமின்மை போன்ற அறிகுறிகளும் இருக்கலாம்.
அடுத்ததாக, ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை அறிய இரத்த சர்க்கரை அளவு மற்றும் HbA1c பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இன்சுலின் எதிர்ப்பு (Insulin Resistance) அல்லது நீரிழிவு நோயின் ஆரம்பநிலை இருப்பவர்கள், கலோரி கட்டுப்பாட்டை பின்பற்றினாலும் எடை குறைப்பதில் சிரமம் சந்திக்கலாம்.
உடலில் இன்சுலின் எதிர்ப்பை மேலும் துல்லியமாக மதிப்பிட Fasting Insulin பரிசோதனை மற்றும் அதனுடன் HOMA-IR கணக்கீடு சிலருக்கு பரிந்துரைக்கப்படுகிறது. இந்த மதிப்பு அதிகமாக இருந்தால், உடல் கொழுப்பை எரிக்கும் திறன் பாதிக்கப்படலாம்.
பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் இருக்கும் பிரச்னை, முகப்பரு, தேவையற்ற முடி வளர்ச்சி, கருத்தரிப்பு சிக்கல் போன்றவை இருந்தால், ஹார்மோன் பரிசோதனைகள் அவசியம். LH, FSH, Total Testosterone, DHEAS, Prolactin மற்றும் தேவைக்கேற்ப AMH போன்ற பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இவை ஹார்மோன் சமநிலையை மதிப்பிட்டு, PCOS போன்ற பிரச்னைகளை கண்டறிய உதவுகின்றன.
கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாடும் உடல் எடை மேலாண்மையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதற்காக கல்லீரல் செயல்பாடு பரிசோதனை (Liver Function Test (LFT)) மற்றும் சிறுநீரக செயல்பாடு பரிசோதனை (Kidney Function Test (KFT)) செய்யப்படுகின்றன. இவை உடலின் வளர்சிதை மாற்றம் மற்றும் மருந்துகளைச் சீராக கையாளும் திறனை மதிப்பிட உதவுகின்றன.
ஊட்டச்சத்து குறைபாடுகளும் உடல் எடை குறைப்பை பாதிக்கக்கூடும். குறிப்பாக வைட்டமின் D, வைட்டமின் B12, Serum Ferritin மற்றும் Iron Profile பரிசோதனைகள் மூலம் குறைபாடுகள் உள்ளதா என்பதை அறியலாம். இந்தச் சத்துக்கள் குறைவாக இருந்தால், சோர்வு அதிகரித்து உடற்பயிற்சி செய்யும் திறன் குறையலாம்.
உடலில் கொழுப்புச் சத்து அளவை அறிய Lipid Profile பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் மொத்த கொலஸ்ட்ரால், LDL, HDL மற்றும் Triglycerides ஆகியவை மதிப்பிடப்படுகின்றன. இது இதய ஆரோக்கியத்தையும், வளர்சிதை மாற்ற நிலையையும் புரிந்துகொள்ள உதவுகிறது.
உடலில் அழற்சி நிலை உள்ளதா என்பதை சிலருக்கு C-Reactive Protein (CRP) அல்லது High-sensitivity CRP (hs-CRP) மூலம் மதிப்பிடலாம். நீண்டகால அழற்சி வளர்சிதை மாற்றத்தை பாதிக்கக்கூடும்.
உடல் எடையை மட்டும் பார்த்து ஆரோக்கியத்தை மதிப்பிட முடியாது. உடல் அமைப்பு பகுப்பாய்வு (Body Composition Analysis) பரிசோதனை மூலம் உடலில் எவ்வளவு கொழுப்பு, தசை, நீர்ச்சத்து மற்றும் உட்புற உறுப்புகளைச் சுற்றியுள்ள Visceral Fat உள்ளது என்பதை அறிய முடியும். சிலருக்கு எடை குறையாவிட்டாலும், கொழுப்பு குறைந்து தசை அதிகரித்திருக்கலாம். இது ஆரோக்கியமான மாற்றமாக கருதப்படுகிறது.
இடுப்புச் சுற்றளவு, இடுப்பு விகிதம் (Waist-Hip Ratio), உடல் நிறை குறியீடு (BMI) போன்ற அளவீடுகளும் உடல் பருமன் அபாயத்தை மதிப்பிடுவதில் முக்கியமானவை.
எடை குறையாத அனைவருக்கும் இந்தப் பரிசோதனைகள் அனைத்தும் அவசியமில்லை. வயது, உடல்நிலை, அறிகுறிகள், குடும்ப வரலாறு மற்றும் மருத்துவரின் மருத்துவ மதிப்பீட்டின் அடிப்படையில் தேவையான பரிசோதனைகள் தேர்வு செய்யப்படுகின்றன.
உடல் எடை குறைப்பது என்பது வெறும் டயட் அல்லது உடற்பயிற்சியால் மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை. உடலின் ஹார்மோன் சமநிலை, வளர்சிதை மாற்றம், ஊட்டச்சத்து நிலை மற்றும் மறைந்திருக்கும் நோய்களை சரியாகக் கண்டறிந்து, அதற்கேற்ற சிகிச்சை மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்களை மேற்கொண்டால்தான் நீடித்த மற்றும் ஆரோக்கியமான உடல் எடைக் குறைப்பை அடைய முடியும்.
- ஆ. கவின்
