அரியானா அரசு நிதி ரூ.504 கோடி மோசடி; 6 ஐஏஎஸ், 3 வங்கி அதிகாரிகள் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்
புதுடெல்லி: அரியானா அரசு துறைகளின் ரூ.504 கோடி நிதி மோசடி வழக்கில் ,அரியானா கேடரைச் சேர்ந்த ஆறு ஐஏஎஸ் அதிகாரிகள், ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கி மற்றும் ஏயு ஸ்மால் பைனான்ஸ் வங்கியின் மூன்று அதிகாரிகள் உட்பட 19 பேருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
அரியானா அரசின் பல்வேறு துறைகளின் நிதிகள் சண்டிகரில் உள்ள ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கி கிளையில் எப்டியில் டெபாசிட் செய்வதற்காக ரூ.504 கோடி செலுத்தப்பட்டது. ஆனால் இந்த பணம் அனைத்தும் பல்வேறு வகைகளில் மோசடியாக திருப்பி விடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
வங்கி ஊழியர்கள் மற்றும் வௌிநபர்களின் கூட்டு சதியால் போலி காசோலைகளை பயன்படுத்தி, போலியான நிறுவனங்கள் மூலம் பணம் வெவ்வேறு கணக்குகளுக்கு மாற்றப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதை விசாரணை மேற்கொண்ட சிபிஐ 54 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டு ரூ.20 கோடி மதிப்புள்ள தங்கம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தது. இதில்,ஐஏஎஸ் அதிகாரிகள், வங்கி அதிகாரிகள்,அரசு அதிகாரிகள் உட்பட 26 பேரை கைது செய்தது.
இந்த நிலையில், 6 ஐஏஎஸ் அதிகாரிகள்,ஐடிஎப்சி மற்றும் ஏயு ஸ்மால் பைனான்ஸ் வங்கி அதிகாரிகள் 3 பேர் உட்பட 19 பேர் மீது சிபிஐ நேற்று பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று சிபிஐயின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.



