Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அரியானாவில் காங்கிரசுக்கு ஆதரவான சூழல் இருந்தும் 3வது முறையாக பாஜக ஆட்சியை பிடித்தது எப்படி?: 5 காரணங்களை கூறும் அரசியல் பார்வையாளர்கள்

சண்டிகர்: அரியானாவில் காங்கிரசுக்கு ஆதரவான சூழல் இருந்தும் 3வது முறையாக பாஜக ஆட்சியை பிடித்தது குறித்து 5 காரணங்களை அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். அரியானா மாநிலத்தில் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியை கைப்பற்றியது. மாநிலத்தில் மோடி 4 முறை மட்டுமே தேர்தல் பிரசாரம் செய்திருந்தாலும், மாநில பாஜகவின் தேர்தல் வியூகம் வெற்றிக்கு கைக் கொடுத்துள்ளது. இந்த வெற்றிக்கு பின்னால் ஐந்து காரணங்கள் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கடந்த பத்தாண்டுகளாக ஆட்சி செய்த மாநிலத்தில், மேலும் ஐந்தாண்டுகள் ஆட்சியமைக்க மக்கள் தேர்வு செய்தது முக்கியமாக பார்க்கப்படுகிறது.

* பாஜகவை பொருத்தமட்டில் ஒரு மாநிலத்தில் தேர்தல் நடக்கவுள்ளது என்றால், ஓராண்டுக்கு முன்பே அதற்கான பணிகளை தொடங்கிவிடும். ‘தேர்தல் இன்ஜினியரிங்; தேர்தல் மைக்ரோ மேலாண்மை’ என்றெல்லாம் கூறுகின்றனர். கடந்த ஒன்பதரை ஆண்டுகளாக முதல்வராக இருந்த மனோகர் லால் கட்டாரை, மக்களவை தேர்தல் நேரத்தில் முதல்வர் பதவியில் இருந்து பாஜக தலைமை தூக்கியது. அவரை முதல்வர் பதவியில் இருந்து தூக்கினால் எதிர்ப்பு கிளம்பலாம் என்று கணக்குப் போட்டனர். ஆனால் முதல்வராக இருந்த மனோகர் லால் கட்டார் மாநில அரசியலில் இருந்து விடுவிக்கப்பட்டு, தேசிய அரசியலுக்கு இழுக்கப்பட்டார். இந்த தேர்தலில் அவரது போஸ்டர் கூட பயன்படுத்தவில்லை. பேரவை தேர்தல் பிரசாரத்தில் கூட அவரை முன்னிறுத்தவில்லை. இது மக்களிடையே கவனத்தை பெற்றது.

* அரியானா மாநிலத்தில் ஜாட் சமூகத்தினருக்கு முக்கிய இடம் உண்டு. கிட்டத்தட்ட 20 சதவீத மக்கள் ஜாட் சமூகத்தினர் ஆவர். ஜாட் சமூகத்தை சேர்ந்த மனோகர் லால் கட்டாரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நயாப் சிங் சைனியை முதல்வராக பாஜக தலைமை நியமித்தது. இது ஜாட் அல்லாத மற்றும் பட்டியலின வாக்குகள் பாஜகவுக்கு ஆதரவாக குவிய உதவியது.

* மாநில பாஜகவில் பூத் அளவில் தீவிரமாக தேர்தல் பணியாற்றினர். அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த ஆதரவு வாக்காளர்களையும் சந்தித்து காங்கிரசுக்கு எதிராக பிரசார வியூகங்களை கொண்டு சென்றனர். வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க தேவையான பிரசாரங்களை முன்னெடுத்தது. இந்த விசயத்தில் பலவீனமான கட்டமைப்பைக் கொண்ட காங்கிரஸ், அனைத்து வாக்காளர்களையும் தங்களுக்குச் சாதகமாக வாக்குச் சாவடிக்கு அழைத்துச் செல்லத் தவறிவிட்டது. மேலும் இது முக்கியம் என்பதை காங்கிரஸ் மறந்து விட்டது. அரியானா காங்கிரசின் அமைப்பு ரீதியான பிரச்னை, வெற்றி வாய்ப்பு இருந்தும் தோல்வியை சந்திக்க நேரிட்டது.

* காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான பூபிந்தர் ஹூடா மற்றும் குமாரி ஷெல்ஜா இடையேயான சண்டையை முளையிலேயே கிள்ளி எறிய தேசிய தலைமையால் முடியவில்லை. மூத்த தலைவர்களின் கோஷ்டி பிரச்னை கீழ்மட்டம் வரை பரவியது. முன்னாள் முதல்வரான பூபிந்தர் ஹூடா ஒரு சர்வாதிகாரியை போல் கட்சியை வழிநடத்தினார். ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்று ராகுல் காந்தி கூறிய முன்மொழிவையும் பூபிந்தர் ஹூடா ஏற்க மறுத்தார். இதன்மூலம் காங்கிரசின் வியூகங்கள் மாநில அளவில் சொதப்பிவிட்டது.

* சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், ஜாட் சமூகத்தினர் காங்கிரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆனால் சட்டசபை தேர்தலில் அது நடக்கவில்லை. இரண்டு ஜாட் சமூகக் கட்சிகளான ஐஎன்எல்டி மற்றும் ஜேஜேபி ஆகியவை இம்முறை ஒன்றையொன்று எதிர்த்துப் போட்டியிட்டது மட்டுமல்லாமல், இரு கட்சிகளும் தலித் கட்சிகளுடன் கூட்டணி அமைத்தன. மாயாவதியின் பிஎஸ்பியுடன் ஐஎன்எல்டி கூட்டணி அமைத்தது. தலித் கட்சித் தலைவர் சந்திரசேகர் ஆசாத்துடன் ஜேஜேபி கூட்டணி அமைத்தது. இதில் ஐஎன்எல்டி - பிஎஸ்பி கூட்டணி ஆறு சதவீத வாக்குகளையும், ஜேஜேபி - சந்திரசேகர் ஆசாத் கூட்டணி ஒரு சதவீத வாக்குகளையும் பெற்றன. அதாவது காங்கிரசுக்கு எதிராக மொத்தம் 7 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இது பாஜகவுக்கு பலத்தை கொடுத்தது.

வாக்கு சதவீதத்தில் காங்கிரஸ் - பாஜக சமபலம்;

மக்களவை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற காங்கிரஸ், அரியானாவில் 37 இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த 2019 தேர்தலை காட்டிலும் 6 இடங்களை கூடுதலாக பெற்றது. இந்த தேர்தலில் 39.09% வாக்குகளும், கூட்டணி கட்சியான மா.கம்யூ எந்த தொகுதியிலும் வெற்றிபெறவில்லை என்றாலும் 0.25% வாக்குகளை பெற்றது. எனவே காங்கிரஸ் கூட்டணி 40% வாக்குகளை பெற்றது. அதேபோல் பாஜக 48 இடங்களை பெற்றிருந்தாலும் கடந்த தேர்தலை காட்டிலும் 8 சீட்டுகள் அதிகம் பெற்றது. இக்கட்சியும் 40% வாக்குகளை பெற்றுள்ளது. பாஜகவும், காங்கிரஸ் கூட்டணியும் 40% வாக்குகளை பெற்றும், பாஜகவே 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது.