Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அறுவடைக்குப் பிந்தைய பாதுகாப்பு முறைகள்!

தை மாதத்தில் உழவுப் பணிகளைத் தொடங்குவதைக் காட்டிலும் அறுவடைப் பணிகளே அதிகளவில் நடைபெறும். நாம் என்னதான் பாடுபட்டு விளைபொருட்களை தரமாகவும், மிகுதியாகவும் விளைவித்தாலும் அவற்றை முறையாக அறுவடை செய்து, பதப்படுத்தி வீட்டுக்கோ, விற்பனைக்கோ கொண்டு செல்வது மிக இன்றியமையாதது. இல்லையென்றால் நாம் மெனக்கெட்டதெல்லாம் வீணாகிவிடும். எனவே அறுவடை சமயத்திலும், அறுவடைக்குப் பின் கையாள வேண்டிய நுட்பங்களையும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். சில தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அறுவடையின்போதும், பதன் செய்யும்போதும், சேமிப்பின் போதும் ஏற்படும் பெருமளவு சேதங்களைக் குறைக்கலாம்.

அறுவடை முறைகள்

முதிர்ச்சி அடைந்த பயிர் பாகங்களை அறுவடை செய்யும் முறையானது பயிருக்கு பயிர் மாறுபடும். பயிறு வகைகளை முழுப்பயிராக அறுவடை செய்கிறோம். தானியப் பயிர்களை கதிர்களை மட்டும் அறுவடை செய்கிறோம். பல்லாண்டு பயிர்களில் காய், கனிகளை மட்டும் அறுவடை செய்கிறோம். காய்கறி, பருத்தி போன்ற பயிர்களில் கால இடைவெளியில் அறுவடை செய்கிறோம்.

விதை பிரித்தெடுத்தல்

மனித மற்றும் இயந்திர சக்திகளைப் பயன்படுத்தி முதிர்ந்த காய்கனிகள் மற்றும் கதிர் பாகங்களில் இருந்து விதைகள் பிரித்தெடுக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக கதிரடிக்கும் இயந்திரம், நிலக்கடலை விதை பிரிப்பான் போன்ற இயந்திரங்களைக் காட்டலாம்.

விதைகளைத் தூற்றி சுத்தம் செய்து தரம் பிரித்தல்.

தூற்றுதல்

அறுவடைக்குப் பிறகு பிரித்தெடுக்கப்பட்ட தானியங்களில் உள்ள அடர்த்தி குறைவான தூசு மற்றும் குப்பைகளை காற்றின் மூலம் பிரித்தெடுக்கும் முறை தூற்றுதல் எனப்படும். தூற்றுவதற்கு இயற்கையான அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்ட காற்று பயன்படுத்தப்படுகிறது.

சுத்தம் செய்தல்

தூற்றிய விதைகளில் உள்ள கற்கள், மண்கட்டிகள் போன்ற தேவையற்ற பொருட்களை சல்லடையின் உதவி கொண்டு சலித்துப் பிரித்தலுக்கு சுத்தம் செய்தல் என்று பெயர்.

தரம் பிரித்தல்

சுத்தம் செய்த விதைகளில் உள்ள முதிராத, உடைந்த, நோய் தாக்கிய விதைகளை பிரித்தெடுக்கும் முறை தரம் பிரித்தல் எனப்படும். இதற்கு வெவ்வேறு கண் அளவுள்ள சல்லடைகள் பயன்படுகிறது. விதைகளை தூற்றி சுத்தம் செய்து தரம் பிரிக்க கிரிப்பன் வகை சுத்தப்படுத்தி மற்றும் தரம் பிரிக்கும் சாதனம் பயன்

படுத்தப்படுகிறது.

உலர்த்துதல்

விதையின் தரம் மற்றும் சேமிப்பினை நிர்ணயிக்கும் காரணிகளுள் உலர்த்துதல் முக்கியமான ஒன்றாகும். அறுவடையின்போது விதைகளின் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும். அதே நிலையில் சேமிப்புக்கு கொண்டு சென்றால் விதையின் தரம் குறைந்துவிடும். எனவே விதைகளில் உள்ள ஈரப்பதத்தை பாதுகாப்பான அளவுக்கு (8-12சதம்) கொண்டு வருவது அவசியமான ஒன்றாகும். உலர்த்துதலை பல்வேறு முறை களில் செய்து விதையிலுள்ள ஈரப்பதத்தைக் குறைக்கலாம்.இயற்கை முறையில் பயிர் வயலில் இருக்கும்போதே நிலவும் உலர் தட்பவெப்பநிலையைப் பயன்படுத்தி விதை களில் உள்ள ஈரப்பதத்தைக் குறைக்கலாம். சூரிய ஒளியைப் பயன்படுத்துதல் அல்லது நிழலில் உலரவைத்தல் மூலம் விதையின் ஈரப்பதத்தை தேவைப்படும் அளவுக்கு கொண்டு வரலாம். இம்முறையில் அடிக்கடி விதைகளை மேல் கீழாக புரட்டி விரைவில் உலர வைக்கலாம். செயற்கை முறையில் விதைகளை உலர வைக்க உலர்த்துவான்கள் பயன்படுகின்றன. இம்முறை மிக அதிக அளவு விதைகளை விரைவில் உலர்த்த பயன்படுகிறது. மற்றொரு முறையில் கால்சியம் குளோரைடு, கால்சியம் ஆக்ஸைடு, சிலிக்காஜெல் போன்ற ரசாயனங்களும் விதை உலர்த்துதலில் பயன்படுத்தப்படுகின்றன

.

பதப்படுத்துதல்

பழம், காய்களைப் பதப்படுத்துதல் என்பது நுண்கிருமிகளிலிருந்து பாதுகாத்து, எதிர்காலத் தேவைக்குப் பழங்களையும், காய்களையும் சேமித்து வைப்பதாகும்.பதப்படுத்துதலின் முறைகள் நுண்ணுயிர் பெருக்கத்தை தடுத்தல், அதிக வெப்பத்தில் பதப்படுத்துதல், மிதமான வெப்பத்தில் பதப்படுத்துதல், வேதிப்பொருட்கள் மூலம் பதப்படுத்துதல், உலர வைத்தல், வடிகட்டுதல், சர்க்கரை மூலம் பதப்படுத்துதல், புளிப்பூட்டுதல், உப்பு மூலம் பதப்படுத்துதல்.

சிப்பமிடல்

விளைபொருளை சிறிய அளவுகளில் சிப்பமிட்டு வைக்கும்போது அவற்றை அடையாளம் காணுதல், ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு கொண்டு செல்லுதல், உபயோகப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதல் எளிதாக இருக்கும். எனவே தரம் பிரிக்கப்பட்ட விதைகளை சிப்பமிடுதல் இன்றியமையாததாகும். சிப்பமிடுதலுக்கு பயன்படுத்தப்படும் பொருள், விதையின் தன்மை, சேமிக்கும் கால அளவு, சேமிப்புக் கிடங்கின் அமைப்பு, விதையின் ஈரப்பதம், சிப்பமிடும் பொருளின் விலை ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். பொதுவாக சிப்பமிடும் பொருள் பின்வரும் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

காற்று புகும் சேமிப்புக் கலன் - சணல்பை, துணிப்பை, காகிதப்பை காற்று எதிர்ப்பு சேமிப்புகலன் - தடிமனுள்ள பாலித்தீன் உறை கொண்ட சணல்பை காற்று புகா சேமிப்பு கலன்கள் - தகர டின்கள், 700 காஜ் தடிமன் அலுமினியத்தாள் கொண்ட பாலித்தீன் பைகள்.சிப்பமிடப் பயன்படும் பொருள் பயிருக்கேற்ப மாறுபடும். எடுத்துக்காட்டாக தானியப்பயிர்கள், பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களை சேகரிக்க துணிப்பை மற்றும் சணல் பைகள் ஏற்றது. காய்கறி மற்றும் பூக்களின் விதைகளை சேமிக்க பாலித்தீன் பைகளை பயன்படுத்தலாம். 5 சதம் குறைவான ஈரப்பதம் உள்ள விதைகளை சேமிக்க அலுமினியத்தாள் கொண்ட பாலித்தீன் பைகள் சிறந்தது. இவற்றைத் தவிர தீவனப்பயிர்களை உலர் தீவனம் மற்றும் பசுந்தீவனம் என இருவகைகளில் சேமிக்கலாம்.