Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சிசிடிவி கேமராக்களை ‘சுவிட்ச் ஆப்’ செய்துவிட்டு கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி: கூச்சலிட்ட 4 வயது மகனையும் கொன்ற கொடூரம்

பெங்களூரு: பெங்களூருவில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவன் மற்றும் 4 வயது மகனை கொடூரமாக கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு சிக்கபனவரா பகுதியை சேர்ந்தவர் அபிநந்தன் (36). இவரது மனைவி ஹரிணி (26). இவர்களுக்கு யதுவீர் (4) என்ற மகன் இருந்தார். அபிநந்தனுக்கும் ஹரிணிக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை இருந்து வந்துள்ளது. இதனால் கடந்த ஜனவரி மாதம் வீட்டை விட்டு வெளியேறிய ஹரிணியை, குடும்பத்தினர் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். மீண்டும் 4 மாதங்களுக்கு முன்பு புதிய வாழ்க்கை வாழப்போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்ற ஹரிணியை உறவினர்கள் மீண்டும் குடும்பம் நடத்த அழைத்து வந்தனர்.

இதனிடையே, சோசியல் மீடியா மூலம் ஹாரோஹள்ளியை சேர்ந்த பேக்டரி தொழிலாளி வினய் குமார் என்பவருடன் ஹரிணிக்கு பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது. இந்த நிலையில், அபிநந்தனின் சொத்துகளை அடைய நினைத்த கள்ளக்காதல் ஜோடி, அவரை கொலை செய்ய திட்டம் தீட்டியது. அதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி அளவில் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஹரிணி ஆப் செய்தார். இரவு 11 மணி அளவில் தன் செல்போனை ‘சுவிட்ச் ஆப்’ செய்துவிட்டு வெளியே காத்திருந்த வினய் குமாரை ஹரிணி வீட்டிற்குள் அழைத்தார். அப்போது பாத்ரூமில் இருந்த அபிநந்தனின் தலையை சுவரில் மோதி, வினய் குமார் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்தார்.

சத்தம் கேட்டு ஓடிவந்த 4 வயது மகன் யதுவீர், தந்தை தாக்கப்படுவதை பார்த்து அலறினான். இதனால் ஆத்திரமடைந்த ஹரிணி, சிறுவனை மிரட்டி படுக்கை அறைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் அபிநந்தனின் பிணத்தை படுக்கையில் போட்ட ஜோடி, சாட்சியத்தை அழிக்க சிறுவன் யதுவீரையும் மூச்சுத்திணறடித்து கொடூரமாக கொலை செய்தனர். தொடர்ந்து ரத்த கறைகளை துணியால் துடைத்து பின்புறத்தில் காயப்போட்டுவிட்டு, ஹரிணி தன் செல்போன் அழைப்புகளை அழித்தார். மறுநாள் திங்கள்கிழமை காலை 7 மணி அளவில் தனது கணவரும் மகனும் மயங்கிக் கிடப்பதாக போலீசார் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து ஹரிணி நாடகமாடியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கதவு உடைக்கப்படாதது மற்றும் சிசிடிவி ஆப் செய்யப்பட்டதை வைத்து ஹரிணியிடம் நடத்திய விசாரணையில் உண்மை வெளிவந்தது. இதையடுத்து இன்று அதிகாலை வினய் குமாரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் நாகேஷ் டி.எல் கூறுகையில், ‘அபிநந்தனை மட்டும் கொலை செய்ய திட்டமிட்ட நிலையில், சிறுவன் பார்த்ததால் அவனையும் கொடூரமாக கொன்றுவிட்டனர். சொத்து மற்றும் கள்ளக்காதல் காரணமாகவே இந்த இரட்டை கொலை நடந்துள்ளது’ என்று தெரிவித்தார்.