உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தல் மரக்கடை அதிபரை துடிதுடிக்க எரித்து கொன்ற கள்ளக்காதலி: அவிநாசி அருகே பரபரப்பு
அவிநாசி: கள்ளக்காதல் விவகாரத்தில் மரக்கடை அதிபரை பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்து கொன்ற பெண்ணை, போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி வள்ளுவர் வீதி, தாமஸ் லைன் பகுதியில் வசிப்பவர் சின்னப்பராஜ் (65). இவர், அதே பகுதியில் சொந்தமாக மரக்கடை வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி அந்தோணியம்மாள். 2 மகள்கள் திருமணமாகி, வெளியூரில் வசிக்கின்றனர். இந்நிலையில், அவிநாசி அருகே சின்னேரிபாளையம் ஊராட்சி வேலாங்காடு பகுதியை சேர்ந்த கனகராஜ் மனைவி பூமணி (48) என்பவருக்கும், சின்னப்பராஜிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது, பின்னர் கள்ளக்காதலாக மாறியது.
பூமணியின் கணவர் கனகராஜ், சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அதன்பிறகு சின்னப்பராஜ் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பூமணியை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் (திங்கள்) இரவு சின்னப்பராஜ், அவரது மரக்கடையில் பூமணியை தாக்கியுள்ளார். இதனால்,அவரை கொலை செய்ய முடிவு செய்ததாக தெரிகிறது. இந்நிலையில் மரக்கடைக்கு வந்தவரை அன்று இரவு சின்னப்பராஜ் டூவீலரில் சின்னேரிபாளையத்தில் உள்ள பூமேனியின் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். நள்ளிரவு 12 மணியளவில் வழியில் வாகனத்தை நிறுத்திவிட்டு, ரோட்டின் ஓரமாக இருந்த சிறு பாலத்தின் திட்டில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரமடைந்த பூமணி, சின்னப்பராஜை பலமாக தாக்கி, ஓடைக்குள் தள்ளிவிட்டுள்ளார். தலையில் அடிபட்டு, பலத்த காயத்துடன் சின்னப்பராஜ் மயங்கி விழுந்தார். அப்போது ஏற்கனவே வாங்கி வைத்திருந்த பெட்ரோலை எடுத்து சின்னப்பராஜ் உடல்மீது ஊற்றி தீ வைத்துள்ளார். தீக்காயங்களுடன் அலறியபடி அங்கிருந்து சுமார் 50 அடி தூரம் உயிருடன் ஓடிய சின்னப்பராஜ், உடல் கருகிய நிலையில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து வீட்டுக்கு சென்ற பூமணி, நேற்று (செவ்வாய்) அதிகாலை அவிநாசி போலீசில் நிலையத்தில் சரணடைந்து நடந்த சம்பவத்தை கூறினார். போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சின்னப்பராஜின் சடலத்தை கைப்பற்றி, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிந்து, பூமணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.