Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அல்வா, வடை, முட்டை தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசின் பட்ஜெட்: தெறிக்கவிடும் போஸ்டர்கள்

பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தலைமையேற்றதில் இருந்து தமிழ்நாட்டிற்கான நிதி ஒதுக்கீடு, வளர்ச்சி திட்டங்கள் ஓரவஞ்னையுடன் செய்து வருகிறது. தமிழ்நாட்டில் இருந்து பல ஆயிரம் கோடி ஜிஎஸ்டி வரியை பெற்று கொண்டு பாஜ ஆளும் மாநிலங்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பதும், தமிழ்நாட்டிற்கு கிள்ளி கொடுப்பதும் வாடிக்கையாக வைத்து உள்ளது. ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டது. 2023-2024 பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டதால், தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு கொடுத்த அல்வா என மக்களுக்கு அல்வா கொடுத்து திமுக, எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்தனர்.

கடந்த ஆண்டு 2024-2025 பட்ஜெட்டிலும் எதுவும் அறிவிக்காமல் தமிழ்நாட்டிற்கு அள்ளி கொடுத்ததாக சொன்னதால், மோடி மற்றும் நிர்மலா சீதாராமன் வாயில் சுட்ட வடை என்று சாலையில் வடை சுட்டு மோடி முகமூடி அணிந்து மக்களுக்கு திமுகவின வழங்கி பிரசாரம் செய்தனர். இந்த ஆண்டு 2025-26 தமிழ்நாட்டிற்கு எதுவுமே அறிவிக்காததால் ‘முட்டை’ படத்துடன் போஸ்டர் ஒட்டி உள்ளனர். ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கடந்த 1ம் தேதி ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். வழக்கம்போல் பாஜவின் இவ்வாண்டு பட்ஜெட்டும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி என்ற காதில் பூ சுற்றும் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஒன்றிய பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடுகள் இருக்கும் என எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டிலும் தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடுகள் மிகவும் குறைவாக உள்ளன. ஒன்றிய பட்ஜெட்டில் விலைவாசியை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், விவசாயத்திற்கான அறிவிப்புகள், சிறு, குறு தொழில் வளர்ச்சிக்கான அம்சங்கள் எதுவும் இல்லை. இந்நிலையில் நெல்லை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒன்றிய அரசின் பட்ஜெட்டை விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ‘கோழி முட்டை’ படத்துடன் பளிச்சிடும் அந்த போஸ்டர்களில், தமிழ்நாட்டுக்கு ஒதுக்கிய நிதி ‘முட்டை’ என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பாஜக - அதிமுக ஒன்றிய அரசு 2026 பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கிய நிதி இதுதான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கோழி முட்டை படம் அனைவரையும் கவர்ந்து வருகிறது. இதேபோல், திமுக அரசு செய்த திட்டங்களையும், ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு செய்த வஞ்சகத்தையும் மக்களிடம் எடுத்து சொல்ல தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர். இதில் கலந்து கொண்ட மக்கள் மற்றும் தொண்டர்களுக்கு, தமிழ்நாட்டிற்கு பாஜ கொடுத்த அல்வா இதுதான் என்று அல்வா கொடுத்து நூதன பிரசாரத்தை செய்து வருகின்றனர். மேலும், ‘இது யாரு கொடுத்த அல்வா... பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு பாஜ கொடுத்த அல்வா’ என்று போஸ்டர்கள் தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில், பட்ஜெட் தயாரிப்பதற்கு முன் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டி அதிகாரிகளுக்கு கொடுத்து தொடங்கி வைப்பதுபோல், நிர்மலா சீதாராமனிடம் இருந்து மோடியும், எடப்பாடியும் அல்வா வாங்குவதுபோல் படம் இடம்பெற்றுள்ளது.

* ‘ஜிடிபியில் 9% பங்களித்தும் பட்ஜெட்டில் தமிழ்நாடு பெயர் கூட இல்லை’

‘ஒன்றிய பாஜ அரசின் பட்ஜெட்டில் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு’ என்னும் தலைப்பில் நெல்லை மேற்கு மாநகர திமுக பொறுப்பாளர் சுப்பிரமணியன் ஒட்டியுள்ள போஸ்டர்களில், ‘பட்ஜெட் உரையில் தமிழ்நாடு என்ற பெயர் கூட குறிப்பிடவில்லை. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 9 சதவீதம் பங்கு வகித்தும் தமிழ்நாட்டிற்கு போதிய நிதி ஒதுக்கீடு இல்லை, மாநிலங்களுக்கு 50 சதவீதம் வரி பகிர்வு தர வேண்டும் என தமிழ்நாடு வலியுறுத்தியும் ஒன்றிய அரசின் பழைய நடைமுறையில் (41 சதவீதம்) எந்த மாற்றமும் இல்லை. கோவை, மதுரை மெட்ரோ திட்டத்திற்கான ரூ.10,740 கோடி மற்றும் ரூ.11,388 கோடியும் வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டின் குடிநீர் திட்டத்திற்கு (ஜல் ஜீவன் திட்டம்) வழங்க வேண்டிய ரூ.3 ஆயிரத்து 112 ேகாடி நிதி வழங்கப்படவில்லை. சமக்ரா சிக்‌ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதி ரூ.3,548 கோடி கல்வி நிதி வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கு என ஒரு அறிவிப்பும் இல்லை. ஒன்றிய பாஜ அரசின் பட்ஜெட்டில் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு, நெல்லை மக்களே சிந்திப்பீர், வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசிற்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.