பாகிஸ்தான் அணியுடன் லீட்ஸ், ஹெடிங்லி மைதானத்தில் நடந்து வரும் முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் ஆலிவர் ராபின்சன், ஜோஷ் டங் இருவரும் தலா 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினர். இவர்களின் துல்லிய தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறிய பாகிஸ்தான் 48.1 ஓவரில் 171 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இன்னிங்ஸ் முடிந்ததும் அந்த பந்தை நினைவுப் பரிசாக யார் வைத்துக் கொள்வது என்ற கேள்வி எழுந்தது.
நாம் இருவருமே பாதிப் பாதி பந்தை எடுத்துக் கொள்ளலாமா? என்று ஜோஷ் டங் முன்மொழிய, அப்படி கிடைத்தால் நன்றாகத் தான் இருக்கும் என்று ராபின்சன் வழிமொழிய… கவலையே வேண்டாம் பந்தை என்னிடம் கொடுங்கள் என்று வாங்கிச் சென்ற ஸ்டேடிய ஊழியர் ஒருவர், 5 நிமிடத்தில் அதை பாதியாக வெட்டிக் கொண்டு வந்துவிட்டார். அப்புறம் என்ன, நீ பாதி… நான் பாதி… பந்து! என்று இருவரும் உற்சாகமாக போஸ் கொடுத்தனர்.



